குர்பானி எனும் உன்னத வணக்கத்தை நிறைவேற்றுவோம்



குர்பானி எனும் உன்னத வணக்கத்தை நிறைவேற்றுவோம்;

குர்பானி அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய ஓர் வணக்கம்:

அல்லாஹ் கூறுகின்றான்: “எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (அல்-குர்ஆன் 108:2)

மேலும், குர்பானி எனப்படும் அறுத்துப் பலியிடும் வணக்கத்தை தனக்காக மட்டும் நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ் தனது திருமறையில் வலியிறுத்தியிருக்கின்றான்.

“நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.” (அல்-குர்ஆன் 6:162)

அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய குர்பானியை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தால் அது இணைவைப்பாகும்:

“அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக” அறிவிப்பவர்: அலி (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

எனவே, குர்பானி என்பது அல்லாஹ் ஒருவனுக்கே நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும் என்பதை நன்கு நினைவில் கொள்ள வேண்டும.

யார்மீது கடமை?
குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி) அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா? என்று கேட்டார். ஆம் இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : பராஃ (ரலி) நூல் : புகாரி (955)

குர்பானி கொடுப்பது அவசியம் என்பதால் தான் ஆறுமாதக் குட்டியை மீண்டும் அறுக்குமாறு அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவசியமில்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு வலியுறுத்திருக்க மாட்டார்கள். வேறுசில அறிவிப்புகளில் திரும்பவும் அறுக்கட்டும் என்று கூறியதாக வந்துள்ளது.

குர்பானியின் நோக்கம்:

குர்பானி கொடுக்க நினைப்பவர் தன்னுடைய எண்ணங்களைத் தூய்மையாக்கிக் கொள்வது மிக மிக அவசியம்! இதுவும் ஒரு வணக்கமாதலால் அல்லாஹ்வுக்காகவே இந்த குர்பானியை நிறைவேற்றுகிறேன் என்ற துய இக்லாசுடன் செய்ய வேண்டும்.

மாறாக, ஒருவர், தாம் வாழும் சமூகத்தில் தன் செல்வ செழிப்பைப் பறைசாற்றும் விதமாகவோ தன் அந்தஸ்த்தை நிலை நிறுத்தவோ, பெருமைக்காகவோ இந்த குர்பானியை செய்தால் அவற்றுக்கு எவ்வித பலனும் கிடைக்காமல் போவதும் குற்றமும் வந்து சேரும்.

குர்பானியின் நோக்கமாக அல்லாஹ் கூறுகின்றான்:

“குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல்-குர்ஆன் 22:37)

எனவே, இறையச்சத்துடன் கூடிய தூய இக்லாசோடு இந்த குர்பானி எனும் வணக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.

குர்பானி கொடுப்பவர் பேணவேண்டிய ஒழுங்குகள்,!

குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களில் தலைமுடியையோ நகங்களையோ களைவது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி); ஆதாரம்: நஸயீ (4361)

“(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம்.” அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் 3997

“தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம்.” அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் 3998

ஒருவருக்கு துல்ஹஜ் மாதம் பிறந்து முதல் பத்து நாட்களுக்குள் சில நாட்கள் கடந்த நிலையில் இடையில் குர்பானி கொடுப்பதற்கு வசதி வாய்ப்புகள் ஏற்படின் அவர் தான் குர்பானி கொடுப்பதாக நிய்யத் வைத்த நிமிடம் முதல் மேற்கண்ட சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

குடும்பத்தின் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பதால் அவர் தான் மேற்கண்ட சட்டங்களுக்கு உட்பட்டவராகின்றார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினர்களுக்கு கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால், அது போன்ற கட்டளைகளைப் பார்க்க முடியவில்லை!

வேண்டுமென்றேயல்லாமல் தானாக ஒருவரின் முடி உதிர்வதாலோ நகம் கழன்று விழுவதாலே தவறேதும் இல்லை! அதுபோலவே, ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக முடி, நகம் போன்றவற்றை நீக்குவதற்கு அவசியம் ஏற்பட்டால் அதனின்றும் தவறேதும் இல்லை!
இன்னும் சிலருக்கு நகம் ஒடிந்து தொங்கிக்கொண்டு அதில் வலியை ஏற்படுத்தி சிரமத்திற்குள்ளாக்கலாம். அந்த சிரமத்திலிருந்து விடுபடவும் தொல்லை தரும் அந்த ஒடிந்த நகத்தை நீக்குவதிலும் தவறு இல்லை!

ஏனெனில், ஒருவரின் சக்திக்கு அப்பாற்பட்டு எந்த உயிருக்கும் அல்லாஹ் சிரமம் ஏற்படுத்த மாட்டான்.

குர்பானி கொடுக்க தகுதியான பிராணிகள்:

நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் குர்பானி கொடுப்பதற்கு ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்கள் தான் தகுதியான பிராணிகள். இவற்றைத் தவிர வேறு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது.

குர்பானி பிராணிகளின் வயது:

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆடு, மாடு, இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

“முஸின்னத் என்ற பருவமுடையதைத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால், ஜத்அத் எனும் பருவமுடைய பிராணியையே அறுக்கலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி); நூல்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

முஸின்னத்; என்று கூறப்படும் வார்த்தை ஆடு, மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும். ஒட்டகத்திற்கு ஐந்து வயது முடிந்தவுடனும் ஆடு, மாடு ஆகிய இரண்டு வகை கால்நடைகளுக்கும் இரண்டு வயது முடிந்தவுடன் இரண்டு பற்கள் வருவதால், ஒட்கத்திற்கு ஐந்து வயதும், ஆடு மற்றும் மாடு ஆகிய கால்நடைகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஜத்அத்: நான்கு வயதான ஒட்டகத்திற்கும், ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகள். (இப்னுல் அஸீர்)

குர்பான் கொடுக்க சிறு பிராணிகளை அறுப்பது கூடாது. குர்பானுக்கு பிராணிகள் கிடைப்பது சிரமமாக இருந்தால் மட்டுமே ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு குறைவான பிராணிகளை அறுத்தல் கூடாது.
நன்றாக கொழுத்த பிராணிகளை குர்பானி கொடுப்பது சிறந்தது.

“மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.” (புகாரி)

குர்பானி கொடுக்கத் தகுதியற்ற பிராணிகள்:

குர்பானி பிராணிகளை வாங்கும் போது அதன் வயதை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதன் தோற்றங்களையும் பார்த்து வாங்குவது மிக அவசியம். ஏனெனில், குறைபாடுகளையுடைய பிராணிகளை குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.

“தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: பரா (ரலி); நூல்கள்: திர்மிதி (1530), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3144).

“பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். 

சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி), ஆதார நூற்கள்: திர்மிதீ 1532, அஹ்மத், அபூதாவூத், நஸயீ.

“நபி (ஸல்) அவர்கள் ‘கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்.

“குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“(ஒரு அன்சாரித் தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன்”என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); முஸ்லிம் : (3799)

காயடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா?

“காயடிக்கப்பட்ட இரண்டு பெரிய கொம்புகளையுடைய இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தனர்”. அறிவிப்பாளர்: அபூராபிஉ (ரலி); நூல்: அஹ்மத், ஹாகிம்.



குர்பானி பிராணிகளை எங்கு வைத்து அறுக்க வேண்டும்?

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.” அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); ஆதாரம்: புகாரி 5552

குர்பானி பிராணிகளை வீட்டில் வைத்து கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது.!!

பராஉ இப்னு ஆஸிப் (ரலி) கூறினார்: “(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று கூறினார்கள்ஆதாரம்: புகாரி 5545

குர்பானி பிராணிகளை கூர்மையான கத்தியைக் கொண்டு அறுக்க வேண்டும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்.” அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி); இப்னுமாஜா 3170

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள்,வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தியை எடு” என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு” என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.” ஆதாரம்: முஸ்லிம் 3977

அறுப்பதற்கு தயாராவதற்கு முன்னரே கத்தியை தீட்டி வைத்திருக்க வேண்டும்:

“ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவரிடம்), ‘இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்க வைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா?’ என்று கூறினார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257

குர்பானி கொடுப்பவர் அறுப்பது தான் சிறந்தது:

குர்பானி கொடுப்பவர் தமது கைகளினாலேயே அறுப்பது சிறந்தது. காரணம் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கரத்தாலேயே குர்பானி பிராணிகளை அறுத்தார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக கடாக்கள் பக்கம் சென்று தம் கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.” அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி); ஆதாரம்: புகாரி 5554

இயலாதவர்கள் பிறர் மூலம் அறுப்பதில் தவறு இல்லை! ஆயினும் இயன்றவரை தாமே அறுக்க முயற்சிப்பது தான் நல்லது.

குர்பானி பிராணியை அறுக்கும் முறை:

குர்பானி கொடுப்பதற்காக அறுக்கும் போது ஆடு, மாடுகளை ஒரு பக்கம் படுக்கவைத்தும் ஒட்டகத்தை நிற்க வைத்தும் கூர்மையான கத்தியைக் கொண்டு அறுக்க வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்” அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 5558

“நபி (ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.” அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 1712

‘இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, ‘அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறை!’ என்று கூறியதை பார்த்தேன்.’ அறிவிப்பவர்: ஸியாத் இப்னு ஜுபைர் (ரலி); புகாரி 1713

குர்பானி பிராணிகளை அறுக்கும் போது என்ன கூறவேண்டும்?

“நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.” அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 5565
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள்,வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தியை எடு” என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு” என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.

பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்(அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)” என்று கூறி, அதை அறுத்தார்கள். ஆதாரம்: முஸ்லிம் 3977

பெண்கள் அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி) நூல் : புகாரி 5504

ஒரு குடும்பத்திற்கு எத்தனை குர்பானி ஆடுகள்?

ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்காகவும் தனித்தனியாக ஒவ்வொரு ஆட்டைக் குர்பானி கொடுக்க வேண்டுமா? அல்லது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்தால் போதுமானதா?
“நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது? என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்; நூல்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா (3147), தப்ரானீ.முஅத்தா (921)
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்தினர்களுக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானிக் கொடுத்தால் போதுமானது.
அதே சமயம், அவர் விரும்பினால் எத்தனை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம். அதற்கு இஸ்லாத்தில் தடை ஏதுமில்லை!
அலீ (ரலி) அறிவித்தார்: “நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.” ஆதாரம்: புகாரி 1718.

மாடு அல்லது ஒட்டகத்தில் கூட்டுக் குர்பானி எத்தனை நபர்கள்,

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு’ எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.” (முஸ்லிம் 2538)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.” (முஸ்லிம் 2537) அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா.
“ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி); ஆதாரம்: அபூதாவூத் (2425)
எனவே, மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில், மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம். ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?

குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கருத்து பல முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது.இதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். இதற்கு குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ எவ்வித ஆதாரமும் இல்லை!

நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மீதியை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்நதளிக்கலாம். இதில் வரையறை இல்லையெனினும் குர்பானி இறைச்சியில் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பங்கிருப்பதை திருமறையும் நபிமொழிகளும் தெளிவுபடுத்துவதால் முழு இறைச்சியையும் குர்பானி கொடுப்பவரே வைத்துக்கொள்ளாமல் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு தாமும் வைத்துக் கொள்ளலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.” (அல்-குர்ஆன் 22:36)

மிக அதிகமான இறைச்சியை தர்மம் செய்யலாம் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:

“…. பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் இறைச்சித் துண்டு ஒன்று கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள். “

(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக முஹம்மது பின் அலீ பின் அல் ஹுஸைன் (ரஹ்); ஆதாரம்: முஸ்லிம் 3137)

மேற்கண்ட ஹதீஸில், ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய 100 ஒட்டகத்தின் குர்பானி இறைச்சியில் ஒவ்வொரு ஒட்டகத்தின் ஒரு துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை மற்றவர்களுக்குப் பகிர்தளித்ததை விளங்க முடிகின்றது.

மேலும், குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானி பிராணியின் இறைச்சியை உண்பதுவும் நபிவழி என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது

குர்பானி இறைச்சியை பல நாட்களுக்கு சேமித்து வைக்கலாமா?

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதனால் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்” என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 3986

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) “உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்” என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)” என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்லிம் 3992

பஞ்ச காலத்தின் போது மூன்று நாட்களுக்கு மேல் சேமிக்க கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, “இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருப்பதால் நாமும் குர்பானி இறைச்சியை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

அதேசமயம், “தான தர்மமும் செய்யுங்கள்” என்று அதே அனுமதியில் கூறப்பட்டிருப்பதால் பேராசையில் மிக அதிக அளவில் சேமித்துவிட்டு ஏழைகளுக்கு கொடுப்பதை பெருமளவில் குறைத்துவிடவும் கூடாது! நன்மையை நாடி செய்யப்படும் இந்தக் குர்பானியயின் மூலம் அதிகளவிற்கு ஏழைகளுக்கு வழங்கி அதிகளவு நன்மைகளைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும.

பிராணிகளின் தோல்

குர்பானிப் பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம். அறிவிப்பவர் : அலீ(ரலி) நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)

தோல்கள் ஏழைகளுக்குச் சேர வேண்டியது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும், இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம்.

மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது உள்ளூர் ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

இரத்தம்

பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனென்றால் இரத்தம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையறியாமல் பலர் ஆடுகளை அறுக்கும் போது வெளிவரும் இரத்தத்தை எடுத்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் அல்குர்ஆன் (2 : 173)

நபியவர்கள் சார்பாக நாம் குர்பானி கொடுக்கலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நன்மை சேரவேண்டுமென்பதற்காக குர்பானி, உம்ரா போன்ற வணக்கச் செயல்களைச் செய்வது ஒரு நபி (ஸல்) அவர்களின் கட்டளையில் இல்லாத ஒரு பித்அத் ஆகும்.

காரணம், நபி (ஸல்) அவர்கள் மீது எல்லையற்ற அன்பும் பாசமும் வைத்திருந்த சஹாபாக்கள் இது போன்று குர்பானியோ அல்லது உம்ராவையோ நபி (ஸல்) அவர்களின் நன்மையை நாடி செய்ததாக எந்தவொரு அறிவிப்பையும் காணவில்லை.

மேலும், தொழுகைக்கான பாங்கு கூறியவுடன், தமக்காக ஸலவாத்து கூறுமாறும், உயர்ந்த அல்-வஸீலாவையும், அல்-பதீலா என்ற உயர்ந்த பதவியையும் மறுமையில் அல்லாஹ் தமக்கு வழங்குவதற்குவதற்காக நம்மிடம் துஆச் செய்யுமாறும் கோரிக்கை வைத்த நபி (ஸல்) அவர்கள், தமக்காக குர்பானி கொடுக்கவோ அல்லது உம்ரா செய்யவோ சொல்லி நமக்கு கட்டளையிடவில்லை.

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி கொடுப்பதோ அல்லது உம்ரா செய்வதோ நன்மையாக இருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக நமக்கு கூறியிருப்பார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது மக்களை சத்தியன்பால் அழைத்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நன்மை, தீமைகளை விளக்கியிருப்பதால் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்கள் செய்கின்ற அனைத்து நல்லறங்களின் கூலியும் அந்த நன்மைகளைச் செய்கின்றவர்களுக்குச் சிறிதும் குறையாமல் நபி (ஸல்) அவர்களுக்கும் போய்ச் சேரும் என்பதை விளங்க வேண்டும். கியாம நாள்வரை வரக்கூடிய நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்கள் செய்கின்ற அனைத்து நல்லறங்களின் வாயிலாகவும் நபி (ஸல்) அவர்களுக்கு தொடர்ந்து நன்மைகள் போய் சேர்ந்துக் கொண்டிருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :“எவர் நேர்வழியின்பால் (மக்களை) அழைக்கின்றாரோ அவருக்கு அதனை பின்பற்றுபவர்களுடைய நற்கூலிகள் போன்றவை உண்டு. அவர்களின் நற்கூலிகளில் எதுவும் குறையாது. எவர் தீய வழியின்பால் அழைக்கின்றாரோ அவருக்கு அத்தீய வழியை பின்பற்றுபவர்களின் பாவங்கள் போன்றவை உண்டு. அதனால் அவர்களின் பாவங்களில் எதுவும் குறைவதில்லை.” (ஆதாரம்:- முஸ்லிம்)

“யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி, ஆதாரம்:- முஸ்லிம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

எனவே, மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் செய்யக் கூடிய சிறிய, பெரிய நல்லமல்கள் எதுவாகிலும் அதனுடைய நன்மைகள் நபி (ஸல்) அவர்களுக்கும் சென்று கொண்டிருக்கின்ற வேளையில், ஒருவர் தனிப்பட்ட முறையில் நான் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி, உம்ரா போன்ற வணக்க முறைகளைச் செய்கின்றேன் என்பது நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாத பித்அத் மட்டுமின்றி அர்த்தமற்றதுமாகும். மேலும், இவ்வாறு இந்த பித்அத்தைச் செய்பவர் தனக்கு மட்டுமின்றி யாருக்கும் பயனளக்காமல் இந்த வணக்கத்தின் நன்மையை திசைதிருப்புவதாகவே இது அமையும்.

இறந்தவர்களுக்காக குர்பானி

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பஸ்ன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (3084)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138) அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)

மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப் பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம், மகள் ஜைனப், மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்காகக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்கக் கூடாது.

பெருநாள் தினம்  மட்டுமே குர்பானி கொடுக்கும் நாள்

பிறை 11,,12, 13 ஆகிய தஷ்ரீக் நாட்களிலும் அறுக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். பின்வரும்  ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இந்தக் கருத்தில் அமைந்துள்ள எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்.

தஷ்ரீகுடைய நாட்கள் அனைத்தும் அறுத்துப் பலியிடும் நாட்களாகும் என்ற வாசகத்தைக் கொண்ட ஹதீஸ்கள் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

எனவே குர்பானியின் சட்டங்களை தெரிந்து அதன் அடிப்படையில் இவ்வணக்கத்தை நிறைவேற்றி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது