03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

 


இஸ்லாமிய மூன்றாவது மாதம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் நடைபெற்ற இஸ்லாமிய போர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு,

‘பூவாத்“ போர்

🔴 ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் ‘ரழ்வா’ என்ற மலைக்கருகில் உள்ள ‘பூவாத்’ என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக் கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆதை பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

‘ஸஃப்வான்“ போர்

🔴 ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் ‘குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்’ என்பவன் சில முஷ்ரிக் வீரர்களுடன் மதீனாவின் மேய்ச்சல் நிலங்கள் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கால்நடைகளில் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றான். இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தங்களின் எழுபது தோழர்களை அழைத்துக் கொண்டு அவனை விரட்டிப் பிடிப்பதற்காக விரைந்தார்கள். பத்ருக்கு அருகிலுள்ள ‘ஸஃப்வான்’ என்ற இடம் வரை சென்றும் குருஸையும் அவனது ஆட்களையும் பிடிக்க முடியாததால் சண்டையின்றி திரும்பினார்கள். இந்தப் போருக்கு ‘முதல் பத்ர் போர்’ என்றும் பெயர் கூறப்படுகிறது.

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் தனது பிரதிநிதியாக ஜைது இப்னு ஹாஸாவை நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

கயவன் கஅபை கொல்லுதல்

🔴  நபி (ஸல்) “கஅப் இப்னு அஷ்ரஃபின் கதையை யார் முடிப்பது? நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துன்பம் தருகிறான்” என்றார்கள். முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு விருப்பமாக இருப்பின் நான் அவனைக் கொலை செய்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் “தங்களைப் பற்றி சில (மட்டமான) வார்த்தைகளை அவனிடம் கூற, நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும்” என்றார். நபி (ஸல்) “சரி” என்று கூறினார்கள்.

இதற்குப் பின் முஹம்மது இப்னு மஸ்லமா கஅபிடம் வந்தார். இதோ... அவர்களின் உரையாடல்:

முஹம்மது இப்னு மஸ்லமா: “இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் தர்மத்தைக் கேட்டு சிரமத்தில் ஆழ்த்துகிறார்.”

கஅப்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் விஷயத்தில் நீங்கள் அதிவிரைவில் சடைவடைந்து விடுவீர்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நாங்கள் இப்போது அவரைப் பின்பற்றியிருக்கிறோம். அவரது முடிவு என்னதான் ஆகிறது என்று பார்க்கும்வரை அவரை விட்டு விலகுவதை நாங்கள் விரும்பவில்லை. அது சரி! நீ எங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மரக்கால் தானியங்களை கடனாகக் கொடுத்துதவு.”

கஅப்: “சரி! தருகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக என்னிடம் அடைமானம் ஏதும் வையுங்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நீ எதைக் கேட்கிறாய்?”

கஅப்: “உங்கள் பெண்களில் சிலரை என்னிடம் அடைமானம் வையுங்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நீ அரபியர்களில் மிக அழகானவனாயிற்றே. உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை அடைமானம் வைக்க முடியும்?”

கஅப்: “சரி! உங்களது பிள்ளைகளை அடைமானம் வையுங்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “எப்படி எங்கள் பிள்ளைகளை அடைமானம் வைப்பது? பிற்காலத்தில் அவர்களை யாராவது ஏசும்போது, இதோ இவன் ஒரு மரக்கால் இரண்டு மரக்காலுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன் என்று இழிவாகப் பேசுவார்களே! எனவே, நாங்கள் உம்மிடம் எங்களது ஆயுதங்களை அடைமானமாக வைக்கிறோம்.”

கஅப்: “சரி”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நாளை வருகிறேன்.”

கஅப் அங்கிருந்து புறப்பட்ட பின், நபித்தோழர் அபூ நாம்லாவும் கஅபைச் சந்தித்தார். அவரும் முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) செய்ததைப் போன்றே செய்தார். கஅபிடம் பல கவிகளைப் பற்றி பேசிவிட்டு “கஅபே! நான் ஒரு தேவைக்காக உன்னிடம் வந்திருக்கிறேன். அதை நீ பிறரிடம் கூறக்கூடாது” என்றார். கஅப், “அவ்வாறே நான் செய்கிறேன்” என்றான். அதற்கு அபூ நாம்லா, “கஅபே! இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் வந்தது எங்களுக்கு ஒரு சோதனையாக ஆகிவிட்டது. அரபியர்கள் எங்களைப் பகைத்துக் கொண்டனர் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர் எங்களின் வியாபார வழிகளை அடைத்துவிட்டனர் இதனால் எங்களது பிள்ளை குட்டிகள் வறுமையில் வாடுகின்றனர் நாங்களும் பெரிய சிரமத்திற்குள்ளாகி விட்டோம்” என்று கூறி, மற்ற விஷயங்களை முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) பேசியவாறே பேசினார். பேச்சுக் கிடையில் என்னுடன் எனக்கு வேண்டிய சில நண்பர்களும் இருக்கின்றனர். நான் அவர்களை நாளை உன்னிடம் அழைத்து வர நாடுறேன். அவர்களிடம் நீ வியாபாரம் செய்யலாம். அவர்களுக்கும் உன்னால் முடிந்த நன்மைகளையும் செய்” என்று பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

ஆக, முஹம்மது இப்னு மஸ்லமாவும் அபூ நாம்ளாவும் கஅபுடன் எதை நோக்கமாக வைத்து பேசினார்களோ அதில் வெற்றி கண்டனர். இவ்வாறு நாளுக்கு நாள் சந்திக்க இவர்களின் பழக்கம் நல்ல பலமடைந்தது. எனவே, இந்த இருவரும் தங்களுடன் ஆயுதங்களை எடுத்து வருவதை கஅப் தடை செய்யவிலை

  ஹிஜ் 3, ரபீஉல் அவ்வல், பிறை 14 சந்திர இரவில் இந்த சிறிய குழு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அக்குழுவுடன் ‘பகீஉல் கர்கத்’ வரை வந்து “அல்லாஹ்வின் பெயர் கூறி செல்லுங்கள்! அல்லாஹ்வே! இவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!” என்று கூறி வழியனுப்பி வைத்தார்கள். பிறகு தங்களின் இல்லம் திரும்பி தொழுகையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதிலும் ஈடுபட்டார்கள்.

இவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபின் கோட்டைக்கு வந்தனர். அபூ நாம்லா (ரழி) அவனைக் கூவி அழைக்கவே அவன் அவர்களிடம் செல்ல எழுந்தான். அவனது மனைவி அவனிடம் “இந்நேரத்தில் நீ எங்கு செல்கிறாய்? இந்த சப்தத்தில் இரத்தம் சொட்டுவதை நான் கேட்கிறேன்” என்று கூறினாள். (அதாவது அவளின் உள் மனது நடக்கப்போகும் அபாயத்தை உணர்ந்துவிட்டது போலும்.)

அதற்கு கஅப், “வந்திருப்பவரோ எனது சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், எனது பால்குடி சகோதரர் அபூ நாம்லாவும்தான். வேறு யாருமில்லை. சங்கைமிக்கவர் ஈட்டி எறிய அழைக்கப்பட்டாலும் கூட அதையும் ஏற்று அங்கு செல்வார்” என்ற பழமொழியைக் கூறி, மனைவியைச் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்களை சந்திக்க இறங்கினான். அவன் நன்கு நறுமணம் பூசி இருந்தான். அவனது தலை நறுமணத்தால் கமழ்ந்து கொண்டு இருந்தது.

இது இப்படியிருக்க, அபூ நாம்லா தனது தோழர்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சொல்லி வைத்திருந்தார். அதாவது, “கஅப் நமக்கு அருகில் வந்தால் அவனது தலை முடியை பிடித்து நான் நுகருவேன். அவனது தலையை நன்கு நான் பிடித்துக் கொண்டதை நீங்கள் பார்த்தவுடன் அவன் மீது பாய்ந்து அவனை வெட்டுங்கள்.” இது அவர்களின் திட்டமாக இருந்தது.

கஅப் கீழே இறங்கி அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அபூ நாம்லா “கஅபே! ‘ஷிஅபுல் அஜுஸ்’ வரைச் சென்று, மீதி இரவு அங்கு பேசிக்கொண்டு இருப்போமே” என்றார். “நீங்கள் விரும்பினால் அவ்வாறே செய்யலாம்” என்று அவனும் கூறினான். அனைவரும் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்றனர். வழியில் அபூ நாம்லா, “இன்றைய நறுமணத்தைப் போல் நான் எங்கும் நுகர்ந்ததே இல்லை” என்றார். கஅப் இந்த புகழ்ச்சியில் மயங்கியவனாக “என்னிடத்தில் அரபுப் பெண்களில் மிக நறுமணமுள்ள பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளுக்காகத்தான் இந்த நறுமணம்” என்றான். அபூ நாம்லா, “நான் உனது தலையை நுகர்ந்துகொள்ள அனுமதி தருகிறாயா?” என்றார். அவன் “அதிலென்ன! நுகரலாமே!” என்றவுடன் தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து தானும் நுகர்ந்து கொண்டு தனது தோழர்களையும் நுகர வைத்தார்.

பின்பு சிறிது நேரம் சென்றவுடன் “நான் மீண்டும் நுகரலாமா?” என்றார். அவன் “சரி!” என்றவுடன் முன்பு போலவே இப்போதும் செய்தார்.

பின்பு சிறிது நேரம் சென்றவுடன் “மீண்டும் நுகரட்டுமா?” என்றார். அதற்கு அவன் சரி! என்றவுடன், தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து இறுக்க பிடித்துக் கொண்டு “இதோ... அல்லாஹ்வின் எதிரி மீது பாயுங்கள்” என்றார். அங்கிருந்த நபித்தோழர்கள் அவன் மீது வாட்களை வீசினர். ஆனால் அவன் சாகவில்லை. இதைப் பார்த்த முஹம்மது இப்னு மஸ்லமா தனது கூர்மையான கத்தியை எடுத்து அவனது தொப்புளுக்குக் கீழ் சொருகி, அவனது மர்மஸ்தானம் வரை கிழித்தார். அல்லாஹ்வின் எதிரி பெரும் சப்தமிட்டவனாக செத்து மடிந்தான். அவர்கள் அவனது தலையைக் கொய்து எடுத்துக் கொண்டனர். அவன் கத்திய கதறலில் அங்குள்ள கோட்டைகள் அனைத்திலும் விளக்குகள் எரிக்கப்பட்டன.

இக்குழுவினர் திரும்பினர். தோழர்களில் ஒருவன் வாளால் ஹாரிஸ் இப்னு அவ்ஸ் உடைய காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்திக் கொண்டிருந்ததால் அவர் சற்று பின்தங்கி விட்டார். இக்குழுவினர் ‘ஹர்ரத்துல் உரைஸ்’ என்ற இடம் வந்த போது தங்களுடன் ஹாரிஸ் வராததைப் பார்த்தவுடன் அங்கு சிறிது நேரம் எதிர்பார்த்திருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைத் தேடி, ஹாஸும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ‘பகீஉல் கர்கத்’ வந்தடைந்து அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினர். அவர்களின் சப்தத்தைக் கேட்ட நபி (ஸல்), தோழர்கள் அவனைக் கொலை செய்து விட்டார்கள் என்பதை அறிந்து அவர்களும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார்கள். பின்பு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தவுடன் “இம்முகங்கள் வெற்றியடைந்தன” என்று கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களது முகமும் வெற்றியடைந்தது” என்று கூறி, அந்த ஷைத்தானின் தலையை நபி (ஸல்) அவர்களுக்கு முன் போட்டார்கள். அல்லாஹ்வின் எதிரி கஅபின் கதை முடிக்கப்பட்டதை நினைத்து நபி (ஸல்) அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள். ஹாரிஸின் கால் காயத்தைப் பற்றி அறியவே அதில் தங்களது உமிழ் நீரைத் தடவினார்கள். அவர் முழுமையாக சுகமடைந்தார். அதற்குப் பிறகு அவருக்கு வலி என்பதே இல்லை. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

நழீர் இனத்தவருடன் போர் 

🔴  (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல், கி.பி. 625 ஆகஸ்டு) இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பார்த்து யூதர்கள் உள்ளுக்குள் எரிந்தனர். முஸ்லிம்களை எதிர்க்க ஆற்றலும் துணிவும் இல்லாததால் சூழ்ச்சி செய்வதிலும், சதித்திட்டம் தீட்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர். தங்களின் பகைமை மற்றும் குரோதத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தினர். போர் புரியாமல் வேறு பலவகை தந்திரங்களைக் கொண்டு முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்தனர். தங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தங்கள் இருந்தும் அதையெல்லாம் சிறிதும் மதிக்காமல் நடந்தனர். கைனுகா குடும்பத்தைச் சேர்ந்த யூதர்களுக்கு நேர்ந்த கதியையும், கஅபு இப்னு அஷ்ரஃபுக்கு நேர்ந்த கதியையும் பார்த்ததும் இவர்கள் தங்களின் அட்டூழியங்களை அடக்கிக்கொண்டு விஷமத்தனங்களை நிறுத்திக் கொண்டனர்.

ஆனால், உஹுத் போருக்குப்பின் இவர்களுக்கத் துணிவு பிறந்தது. பகைமை மற்றும் மோசடியையும் வெளிப்படையாக செய்யத் துவங்கினர். மக்காவிலுள்ள இணைவைப்பவர்களுடனும், மதீனாவிலுள்ள நயவஞ்சகர்களுடனும் தங்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் குதித்தனர். (ஸுனன் அபூதாவூது)

நபி (ஸல்) இந்த யூதர்கள் குறித்து மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். ஆயினும், ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பின் இவர்களுக்கு புது துணிவு பிறந்தது. அதனால் நபியவர்களைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இவர்களிடம் வந்தார்கள். “அம்ர் இப்னு உமையா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாக கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்கக் கொடுக்க வேண்டும். அதற்காக தங்களால் ஆன உதவிகளைச் செய்யும்படி” நபியவர்கள் கோரினார்கள். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இதற்குமுன் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி நஷ்டஈடு கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் ஒன்று. காலங்காலமாக சூழ்ச்சிக்கு பெயர் போன வஞ்சக யூதர்கள் நபியவர்களிடம் “இங்கு அமருங்கள்! நீங்கள் வந்த தேவையை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” என்றனர். இவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து நபியவர்கள் அவர்களின் வீட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர், உமர், அலீ (ரழி) மற்றும் சில தோழர்களும் இருந்தனர்.

யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்தனர். அவர்கள் மீது விதிக்கப்பட்ட கேட்டை ஷைத்தான் அவர்களுக்க அலங்கரித்து அதை செய்யத் தூண்டினான். எனவே, அவர்கள் நபியவர்களை கொன்றுவிட சதித்திட்டம் தீட்டினர். திருகைக் கல்லை எடுத்து வீட்டுக் கூரைக்கு மேல் ஏறி முஹம்மதின் தலை மீது போட்டு தலையை நசுக்கி கொன்றுவிடலாம் என் ஒருவன் ஆலோசனைக் கூறினான். அதை அனைவரும் ஆமோதித்தனர். இதைச் செய்ய வழிகேடன் அம்ர் இப்னு ஜஹாஷ் என்ற விஷமி ஆயத்தமானான். ஆனால் ஸலாம் இப்னு மிஷ்கம் என்பவர் “அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று அவர்களைத் தடுத்தார். மேலும் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் திட்டம் அவருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அது நமக்கும் அவருக்குமிடையில் உள்ள உடன்படிக்கையை முறிப்பதாகி விடும்” என்று எச்சரித்தார். எனினும், தங்களது சதிதிட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அவர்களின் இந்தச் சதித்திட்டத்தை அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அறிவித்தார். உடனடியாக அங்கிருந்து எழுந்து நபியவர்களும் அவர்களது தோழர்களும் மதீனா வந்தடைந்தனர். “நபியே! நீங்கள் எழுந்தது எதற்காக என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவில்லையே” என வினவினார்கள். நபியவர்கள் யூதர்கள் செய்த சதியைத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

இச்சம்பவத்திற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் தனது தோழர் முஹம்மது இப்னு மஸ்லமாவை நழீர் இனத்தவரிடம் அனுப்பி, “மதீனாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்; எங்களுடன் மதீனாவில் நீங்கள் தங்கக் கூடாது; இனி மதீனாவில் வசிக்கக் கூடாது; பத்து நாட்கள் மட்டும் நான் உங்களுக்கு அவகாசம் தருகிறேன்; அதற்கு மேலும் யாராவது மதீனாவில் தங்கியிருந்தால் அவரது கழுத்தை வெட்டி விடுவேன்” என்று கூறும்படி சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கட்டளையை யூதர்கள் ஏற்றே ஆகவேண்டி இருந்தது. மதீனாவை விட்டுச் செல்ல தேவையான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நயவஞ்சகர்ளின் தலைவன் இப்னு உபை யூதர்களிடம் தூது அனுப்பி, “நீங்கள் உங்களது இல்லங்களில் இருந்து கொண்டு உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். உங்களது இல்லங்களிலிருந்து வெளியேறவேண்டாம். என்னுடன் இரண்டாயிரம் வீரர்கள் தயாராக உள்ளனர். முஹம்மது உங்கள் மீது போர் தொடுத்தால் அந்த வீரர்கள் உங்களுடன் சேர்ந்து கொண்டு உங்கள் உயிரைக் காக்க தங்களின் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். மேலும், குரைளா மற்றும், கத்ஃபான் கோத்திரத்தில் உள்ள உங்களது நண்பர்களும் உங்கள் உதவிக்கு வருவார்கள்” என்று கூறினான்.

இப்னு உபைபின் மேற்கூறப்பட்ட கூற்றை விவதித்து, இந்த குர்ஆன் வசனம் இறங்கியது.

(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான். அல்குர்ஆன் 59:11

மதீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றிருந்த யூதர்களுக்கு இதனால் துணிவு பிறந்தது. எதிர்த்து போரிடுவோம் என்று முடிவு செய்தனர். நயவஞ்சகர்களின் தலைவன் கூறியதைக் கேட்டு நப்பாசை கொண்ட யூதர்களின் தலைவன் ஹை இப்னு அக்தப் நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி “நாங்கள் எங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற மாட்டோம். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்துகொள்!” என்று கூறினான்.

உண்மையில் இந்நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகச் சிக்கலானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் மிகச் சிரமமான இக்காலகட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதும், சண்டை செய்வதும் ஆபத்தான முடிவை உண்டாக்கலாம்; மற்ற அரபுகள் ஒருபக்கம் தங்களைத் தாக்குகிறார்கள். மேலும், தங்களின் அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களையும் சதி செய்து கொன்று விடுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். இதுமட்டுமின்றி நழீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் ஓரளவுக்கு தேவையான வலிமையுடன் விளங்கியதால் அவர்கள் சரணடைவது அடிபணிவது சற்று கடினமான விஷயம்தான். அவர்களுடன் போரிடுவது பல இன்னல்களை சந்திக்கக் காரணமாகலாம். ஆயினும், இதற்கெல்லாம் முஸ்லிம்கள் தளர்ந்து விடவில்லை. பிஃரு மஊனாவின் நிகழ்ச்சியும் அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை அதிகம் தூண்டின. தங்களின் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்படும் மோசடி மற்றும் வஞ்சகச் செயல்களை முடிவுக்குக் கொணடு வந்து அதை செய்பவர்களுக்கும், செய்யத் தூண்டுபவர்களுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்; நபி (ஸல்) அவர்களையே கொல்லத் துணிந்த நழீர் இனத்தவரிடம் போர் செய்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தனர். அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் துணிந்தனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஹை இப்னு அக்தப் கூறிய பதில் கிடைத்தவுடன் தக்பீர் (அல்லாஹ் அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர் இனத்தவரிடம் சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அலீ (ரழி) படையின் கொடியை ஏந்தியிருக்க நபியவர்கள் படையுடன் புறப்பட்டுச் சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள். நழீர் இனத்தவர் தங்களின் கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்களை நோக்கி அம்புகளையும், கற்களையும் வீசி எறிந்து தாக்கினர். இதற்கு, அவர்களது தோட்டங்களும் பேரீத்த மரங்களும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. எனவே, அவர்களின் தோட்டங்களையும் பேரீத்த மரங்களையும் வெட்டி எரித்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றியே ஹஸ்ஸான் கூறுகிறார்.

புவைராவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவது

பனூ லுஅய் கூட்டத் தலைவர்களுக்கு மிக எளிதாகிவிட்டது.

இவர்களின் பேரீத்த தோட்டத்தின் பெயர்தான் புவைரா என்பது. அல்லாஹ் இதுகுறித்தே இந்த வசனத்தை இறக்கினான்.

நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான். அல்குர்ஆன் 59:5

குரைளா யூதர்கள் உதவிக்கு முன் வரவில்லை. அவ்வாறே இவர்களின் நண்பர்கள் கத்ஃபான் கிளையைச் சேர்ந்தவர்களும் மற்றும் அப்துல்லாஹ் இப்ன உபைய்யும் உதவிக்கு வராமல் விலகிக் கொண்டனர். எனவேதான் இவர்களின் இந்த நடத்தையை அல்லாஹ் உவமானத்துடன் கூறுகிறான்.

(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான். அல்குர்ஆன் 59:16

முற்றுகை 6 அல்லது 15 இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும் நடுக்கத்தையும் போட்டான். “ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்; நாங்கள் மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்” என்று நபியவர்களிடம் தூதனுப்பினார்கள்.

அதற்க நபி(ஸல்) அவர்கள் “உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகளையும் அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடுங்கள்; ஒட்டகங்கள் சுமக்கும் அளவுள்ள சாமான்களையும் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லலாம்; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது” என்று கூறினார்கள்.

இந்த நிபந்தனைக்கு அவர்கள் அடிபணிந்தனர். தங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்தனர். வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்து தங்களுடன் எடுத்து கொண்டனர். அவர்களில் சிலரோ ஆணிகளையும், முகட்டில் இருந்த பலகைகளையும், முளைக் கம்புகளையும் கூட தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பின்பு பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு 600 ஒட்டகைகளில் புறப்பட்டனர். ஹை இப்னு அக்தப், ஸல்லாம் இப்னு அபூஹுகைக் போன்ற தலைவர்களும் மற்றும் பெரும்பாலான யூதர்களும் கைபர் சென்று தங்கினர். மற்றவர்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றனர். அவர்களில் இருவர் மட்டும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால் தங்களது சொத்து செல்வங்களுடன் மதீனாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், அவர்கள வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் 50 கவச ஆடைகளும், 50 தலைக் கவசங்களும், 340 வாட்களும் இருந்தன.

இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அருளினான். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை செய்து கொள்ள முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று நபியவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு (மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறியவர்களுக்கு) மட்டும் நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஆனால், அன்சாரிகளில் ஏழையாக இருந்த அபூ துஜான, ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) இருவருக்கும் அதில் பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினருக்கு ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின் பாதையில் போருக்குப் பயன்படுத்தினார்கள்.

இப்போர் குறித்த விவரங்களை முழுவதுமாக ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இறக்கினான். இந்த அத்தியாயத்தில் “யூதர்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்; நயவஞ்சகர்களின் கொள்கையும் பழக்கமும் எவ்வாறனது? போரின்றி கிடைக்கும் செல்வத்தின் சட்டம் என்ன?” போன்ற விவரங்கள் கூறப்பட்டன. மேலும் முஹாஜிர்கள், அன்சாரிகள் குறித்து இந்த அத்தியாயத்தில் புகழ்ந்து கூறியிருக்கிறான். போர் நலன்களை கருத்தில் கொண்டு எதிரிகளுக்குச் சொந்தமான மரங்களை வெட்டுவதும், கொளுத்துவதும் சரியானதே; இது விஷமத்தனமாக ஆகாது என்ற அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளான். அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறையச்சத்தைக் கடைப்பிடித்து, மறுமைக்கான நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இறுதியாக தனது புகழ்ச்சியைக் கூறி உயர்வுமிக்க தனது பெயர்களை விவரித்து அத்தியாயத்தை நிறைவு செய்கிறான்.

தூமத்துல் ஜன்தல் போர் 

🔴  (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25) நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் பத்ரில் இருந்து திரும்பிய பிறகு, மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலை நிலவியது. முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆகவே, இப்போது அரபு நாடு முழுவதும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காகவும், முஸ்லிம்களை நேசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் முஸ்லிம்களின் பலத்தை அறிந்து கொள்வதற்காகவும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர நபியவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தினார்கள்.

இரண்டாம் பத்ர் போரிலிருந்து திரும்பிய பிறகு மதீனாவில் 6 மாதங்கள் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் ஷாம் நாட்டிற்கருகில் உள்ள ‘தூமத்துல் ஜன்தல்’ என்ற இடத்தைச் சுற்றி வாழும் கோத்திரத்தினர் வழிப்பறி, கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் மேலும், மதீனாவின் மீது திடீர் தாக்குதல் நடத்த பெரும் கூட்டம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்கள் என்ற செய்தி நபியவர்களுக்கு எட்டியது. எனவே, நபியவர்கள் மதீனாவில் ‘ஸிபா இப்னு உர்ஃபுத்தா கிஃபா’ என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்து விட்டு 1000 முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி 5, ரபீஉல் அவ்வல், பிறை 25ல் தூமத்துல் ஜன்தல் நோக்கி கிளம்பினார்கள். உத்ரா கிளையைச் சேர்ந்த ‘மத்கூர்’ என்ற நபரைத் தனக்கு வழிகாட்டியாக நபியவர்கள் அழைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக பயணத்தைத் தொடர்ந்தார்கள். எதிரிகள் கொள்ளையிடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நபியவர்கள் பயணத்தை இவ்வாறு தொடர்ந்தார்கள். நபியவர்கள் அங்கு சென்ற போது அம்மக்கள் அங்கு இல்லை, வெளியில் சென்றிருந்தார்கள். நபியவர்கள் அவர்களின் கால்நடைகளைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிலர் தப்பித்து விட்டனர் மற்ற சிலர் எதிர்த்து மடிந்தனர்.

இதற்குப் பின் ‘தூமத்துல் ஜன்தல்’ என்ற இடத்திற்கு சென்ற போது அங்குள்ள அனைவரும் தங்கள் இல்லங்களைக் காலி செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். நபியவர்கள் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து, சுற்றியுள்ள இடங்களுக்குப் படைகளை அனுப்பித் தேடியும் எவரும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, மதீனாவிற்குத் திரும்ப ஆயத்தமானார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்போருக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்குள்ள ‘உயய்னா இப்னு ஸ்னு’ என்பவருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ‘தூமா’ என்பது ‘மஷாஃபுஷ் ஷாம்’ என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற இடமாகும். இங்கிருந்து ‘திமஷ்க்’ நகரம் ஐந்து இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது. இந்நகரம் மதீனாவிலிருந்து 15 இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது.

இதுபோன்ற மதிநுட்பமான, தீர்க்கமான நடவடிக்கைகளினால் அமைதி மற்றும் பாதுகாப்பை அனைத்து பகுதிகளிலும் நிறுவி, நிலைமையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் நபி (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மேலும், இதன் மூலம் முஸ்லிம்களுக்குச் சாதகமான நல்ல சூழ்நிலையை உருவாக்கினார்கள். பல பக்கங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு வந்து கொண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சிரமங்களை அகற்றினார்கள். நயவஞ்சகர்களும் அடங்கி அமைதியாகி விட்டார்கள். யூதர்களில் ஒரு முக்கிய பிரிவினரான ‘நழீர்’ என்ற கோத்திரத்தினரை மதீனாவிலிருந்து முற்றிலும் நாடு கடத்தப்பட்டதை பார்த்து பயந்துபோன மற்றொரு கோத்திரத்தினர், தாங்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒழுங்காக நிறைவேற்றினர். கிராம அரபிகளும் தங்களது அட்யூழியங்களையும் வம்புத்தனங்களையும் அடக்கிக் கொண்டு முஸ்லிம்களுக்குப் பணிந்து நடந்தனர். மக்காவிலிருந்த குறைஷிகளும் முஸ்லிம்களைத் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இதுபோன்ற சாதகமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டதால் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செம்மையாக நிறைவேற்றுவதற்குரிய நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பெற்றனர்.

 ‘கம்ர்’ ஒரு படைப்பிரிவு அனுப்பியது

🔴  உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் நாற்பது தோழர்களை ‘கம்ர்’ என்ற இடத்துக்கு ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ரபீஉல் ஆகில் நபியவர்கள் அனுப்பினார்கள். ‘கம்ர்’ என்பது அஸத் கிளையினருக்கு சொந்தமான கிணற்றுக்குரிய பெயராகும். அங்குதான் அவர்கள் வசித்து வந்தனர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த அக்கூட்டத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களின் இருநூறு ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு முஸ்லிம்கள் மதீனா திரும்பினர்.

லஹ்யான் போர் 

🔴  (ஹிஜ் 6, ரபீவுல் அவ்வல்) ரஜீஃயில் கொல்லப்பட்ட தங்களது தோழர்களுக்காக லஹ்யானியரிடம் பழிதீர்க்க நாடி ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ஜமாதுல் அவ்வல் மாதத்தில் இருநூறு தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஷாம் நாட்டை நோக்கிப் பயணிப்பதாகக் கூறி வெகு விரைவாகப் பயணத்தை மேற்கொண்டு அமஜ், உஸ்ஃபான் என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள ‘குரான்’ என்ற பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்குதான் நபித்தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்காக அல்லாஹ்வின் கருணை வேண்டி பிரார்த்தித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட லஹ்யானியர் அங்கிருந்து தப்பித்துச் சென்று மலை உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். எவரும் முஸ்லிம்களின் கையில் அகப்படவில்லை. நபியவர்கள் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிறு சிறு குழுக்களை அனுப்பி தேடும்படி பணித்தார்கள். ஆனால், எவரையும் பிடிக்க முடியவில்லை. நபியவர்கள் அங்கிருந்து ‘உஸ்ஃபான்’ என்ற இடம் வரை சென்றார்கள். அங்கிருந்து ‘குராவுல் கமீம்’ என்ற இடத்திற்கு பத்து குதிரை வீரர்களை அனுப்பினார்கள். தான் வந்திருக்கும் செய்தி குறைஷிகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். பின்பு அங்கிருந்து தனது தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிற்குத் திரும்பினார்கள். இவ்வாறு நபியவர்கள் பதினான்கு நாட்கள் தங்களது படையுடன் சுற்றிவிட்டு திரும்பினார்கள்.

‘துல்கஸ்ஸா’ ஒரு 6 பேர் கொண்ட குழு அனுப்புதல், 

🔴  முஹம்மதிப்னு மஸ்லமா (ரழி) அவர்களைப் பத்து தோழர்களுடன் ஸஅலபா கிளையினர் வசிக்கும் ‘துல்கஸ்ஸா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரபிஉல் அவ்வல் அல்லது ரபிஉல் ஆகில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். முஸ்லிம்களின் வருகையை அறிந்த ஸஅலபாவினர் இரகசியமாக மறைந்து கொண்டனர். நபித்தோழர்கள் ஓர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரெனத் தாக்குதல் நடத்தி முஹம்மதிப்னு மஸ்லமாவைத் தவிர மற்ற அனைவரையும் கொன்று விட்டனர். இவர் மட்டும் காயத்துடன் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார்.

தாதுர் ரிகா

🔴  இஸ்லாமிற்கு எதிரான மூன்று மாபெரும் ராணுவங்களில் பலம் வாய்ந்த இரண்டு ராணுவங்களை முற்றிலும் முறியடித்ததற்குப் பின் மூன்றாவது எதிரியின் பக்கம் தங்களது கவனத்தை முழுமையாகத் திருப்பினார்கள். நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகளே அந்த மூன்றாவது எதிரிகள். அந்த அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது, திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட ஊரிலோ நகரத்திலோ வசிக்கவில்லை. இவர்களது இல்லங்கள் பெரும் கோட்டைகளோ அரண்களோ இல்லை. மாறாக, முகவரியின்றி, பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ, முந்திய இரு எதிரிகளை அடக்கியதைவிட சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆகவே, அவர்களை அச்சுறுத்தும் படி தாக்குதல்கள் நடத்துவது அவசியமாயிற்று. அதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த அரபிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக நபியவர்கள் எடுத்த ஒரு போர் நடவடிக்கைக்கு “தாதுர் ரிகா” என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் நான்காம் ஆண்டு நடந்தது என்று கூறுகின்றனர். ஆனால், இப்போல் அபூ மூஸா அஷ்அரி (ரழி) மற்றும் அபூஹுரைரா (ரழி) கலந்து கொண்டதிலிருந்து இப்போர் கைபர் போருக்கு பின்னர்தான் நடந்தது என்று உறுதியாக சொல்ல முடிகிறது. ஆகவே, ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும்.

இப்போர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது: கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் ஆகிய இம்மூன்று கிளையினரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குத் தெரிந்தவுடன் 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். மதீனாவில் அபூதர் அல்லது உஸ்மானைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். தங்களது படையுடன் அவர்களது ஊர்களுக்குள் நீண்ட தூரம் வரை நபி (ஸல்) ஊடுருவிச் சென்றார்கள். மதீனாவிலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரமுள்ள ‘நக்ல்’ என்ற இடத்தை அடைந்தார்கள். அங்குக் கத்ஃபான் கிளையினரின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்து ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஆகி, ஒருவர் மற்றவரை அச்சுறுத்திக் கொண்டனர். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. எனினும், நபி (ஸல்) அன்றைய பொழுது ‘ஸலாத்துல் கவ்ஃப்“” முறைப்படி அனைத்து தொழுகைகளையும் தொழ வைத்தார்கள்.

ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: (படை இரண்டாக பிரிக்கப்பட்டது) தொழுகைக்கு இகாமத் சொல்லப்படவே நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரிவினருக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். இரண்டு ரக்அத்துகளை முடித்துக் கொண்டு அப்பிரிவினர் பாதுகாப்பிற்குச் சென்றுவிட, மற்றொரு பிரிவினர் பிந்திய இரண்டு ரக்அத்தில் நபியுடன் சேர்ந்து தொழுதனர். ஆக, நபி (ஸல்) நான்கு ரக்அத்தும், மற்ற இரண்டு பிரிவினரும் இரண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதனர் (ஸஹீஹுல் புகாரி)

அபூ மூஸா அஷ்அ (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இப்போருக்காக புறப்பட்டோம். ஓர் ஒட்டகத்தில் ஆறு நபர்கள் வீதம் மாறி மாறி சவாரி செய்தோம். இதனால் எங்களது கால்கள் வெடித்து விட்டன. எனது கால்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் எல்லாம் பெயர்ந்து விட்டன. அதனால் துண்டுத் துணிகளை எடுத்து எங்களது கால்களைச் சுற்றிக் கொண்டோம். எனவேதான் இப்போருக்குப் பெயர் ‘தாதுர் கா’ (துண்டுத் துணிகள் உடையது) என்று அழைக்கப்பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் இணைவைப்பாளர் ஒருவன் மனைவியை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர். அவளது கணவன் “அதற்குப் பகரமாக ஒரு நபித்தோழரைக் கொல்வேன்” என்று நேர்ச்சை செய்து கொண்டு, இரவில் முஸ்லிம்கள் இருந்த இடம் நோக்கி வந்தான். நபி (ஸல்) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவும் எதிரிகளைக் கண்காணிப்பதற்காகவும் அப்பாது இப்னு பிஷ்ர், அம்மார் இப்னு யாஸிர் (ரழி) ஆகிய இரு வீரர்களை நியமித்தார்கள். அப்பாது (ரழி) தொழுகையில் ஈடுபட்டார்கள். (அம்மார் (ரழி) தூங்கி விட்டார்) அப்போது அவன் அப்பாத் (ரழி) அவர்களை நோக்கி அம்பெறிந்தான். அவர் அதை பிடுங்கி எறிந்துவிட்டு தொழுகையை முறிக்காமல் தொடர்ந்தார்கள். இவ்வாறு மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை முறிக்கவில்லை. இறுதியாக ஸலாம் கொடுத்த பின்னர் தனது தோழரை எழுப்பினார். அவர் “ஸுப்ஹானல்லாஹ்! என்னை நீங்கள் எழுப்பியிருக்கலாமே?” என்றார். அதற்கு அவர் “நான் ஒரு சூராவை ஓதிக்கொண்டு இருந்தேன். அதை உடனே முறிப்பதை விரும்பவில்லை” என்றார். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

வம்பர்களாக இருந்து வந்த கிராமப்புற அரபுகளின் உள்ளங்களில் இப்போர் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. இப்போருக்குப் பின் நபி (ஸல்) அனுப்பிய படையெடுப்புகளின் விவரங்களை நாம் அலசிப்பார்க்கும் போது இப்போருக்குப் பின் கத்ஃபான் கிளையினர் முற்றிலும் துணிவை இழந்து, சிறிது சிறிதாகப் பணிந்து, இறுதியில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்தக் கிராமவாசிகளில் பல குடும்பத்தினர், நபி (ஸல்) அவர்களுடன் மக்காவை வெற்றி கொள்ள வந்தனர். அதற்குப் பிறகு ஹுனைன் போரிலும் கலந்து கொண்டனர். அதன் கனீமத்தும் இவர்களுக்குக் கிடைத்தது. மக்கா வெற்றிக்குப் பின் இவர்களிடம் ஜகாத் வசூல் செய்ய நபி (ஸல்) தங்களது ஆட்களை அனுப்பினார்கள். அவர்களும் ஜகாத்தை நிறைவேற்றினார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம்.

கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு:

🔴  ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில் இப்படை அனுப்பப்பட்டது. குழாஆ கிளையினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த பெருமளவில் கூட்டங்களைச் சேர்க்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. அதனால் கஅபு இப்னு உமைர் அல்அன்சாரியின் தலைமையில் பதினைந்து தோழர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எதிரிகளைச் சந்தித்து அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்தனர். இதில் அனைத்து முஸ்லிம்களும் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

ஷுஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு: 

🔴  ‘ஹவாஸின்’ என்ற கிளையினர் முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பலமுறை உதவி செய்து வந்தனர். இதனால் அவர்களைக் கண்டிப்பதற்காக ஹிஜ்ரி 8, ரபீஉல் அவ்வல் மாதம், 25 வீரர்களுடன் ஷுஜா இப்னு வஹப் என்ற தோhழரை ‘தாத் இர்க்’ என்ற இடத்திற்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். அங்கு சண்டை ஏதும் நடக்கவில்லை. (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் படைப் பிரிவு: 

🔴 ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் ‘ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் கிலாபி’ என்பவரின் தலைமையில் கிளாப் கிளையினரை இஸ்லாமின் பக்கம் அழைப்பதற்காக நபி (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களின் அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்துப் போருக்குத் தயாரானார்கள். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். எதிரிகளில் ஒருவன் மட்டும் கொல்லப்பட்டான்.

அலீ படைப் பிரிவு: 

🔴  தை கூட்டத்தினருக்கென்று பிரசித்திப்பெற்ற சிலை ஒன்றிருந்தது. அதை அம்மக்கள் ‘ஃபுல்ஸ்’ என்றழைத்தனர். அதை இடிப்பதற்ககாக அலீ இப்னு அபூ தாலிபை 150 வீரர்களுடன் ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் நூறு ஒட்டகைகள், ஐம்பது குதிரைகளில் பயணம் செய்தனர். இவர்களிடம் கருப்பு நிறத்தில் பெரிய கொடி ஒன்றும், வெள்ளை நிறத்தில் சிறிய கொடி ஒன்றும் இருந்தது. வந்து சேர வேண்டிய இடத்தை அடைந்தவுடன், ஃபுல்ஸ் சிலையைத் தகர்த்தெறிந்து விட்டு அங்கிருந்த கஜானாவையும் கைப்பற்றினர். அதில் மூன்று வாட்களும், மூன்று கவச ஆடைகளும் இருந்தன.

அங்கு வசித்த ‘ஹாத்திம்’ குடும்பத்தனரிடம் சண்டையிட்டு நிறைய கால்நடைகளைக் கைப்பற்றி அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு தய்ம் கிளையினரின் தலைவராக இருந்த அதீ இப்னு ஹாதிம் தப்பித்து ஷாம் நாட்டை (சிரியா) நோக்கி ஓட்டம் பிடித்தார். கைதியாக்கப்பட்டவர்களில் இவன் சகோதரியும் இருந்தார். மதீனா வரும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்காக வெற்றிப் பொருளில் ஐந்தில் ஒரு பகுதியை ஒதுக்கி விட்டு மீதியை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால், கைதிகளில் ஹாத்திம் குடும்பத்தாரை மட்டும் பங்கிடாமல் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதீயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் தன் மீது இரக்கம் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உதவி செய்பவரும் ஓடிவிட்டார் தந்தையும் இறந்துவிட்டார் நானோ வயதான மூதாட்டி. எனக்குப் பணிவிடை செய்வதற்கும் யாருமில்லை. எனக்கு உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்” என்று அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) “உமக்கு உதவி செய்பவர் யார்?” என்று கேட்க, “அதீ இப்னு ஹாத்திம்” என்று பதிலளித்தார். “அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் விரண்டோடிய அவரா?” என்று கேட்டுவிட்டு வேறெதுவும் பேசாமல் சென்று விட்டார்கள்.

மறுநாளும் இதுபோன்றே நபி (ஸல்) அவர்களிடம் அப்பெண்மணி உரையாடினார். முந்தைய நாள் கூறியது போன்றே கூறிவிட்டு சென்று விட்டார்கள். மூன்றாம் நாளும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முன்பு கூறியது போன்றே கேட்டுக் கொண்டார். நபி (ஸல்) அவர் மீது இரக்கம் காட்டி அவரை விடுதலை செய்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒருவர் இருந்தார். அநேகமாக அவர் அலீயாக இருக்குமென்று அப்பெண் கூறுகிறார். அவர் “வாகனிப்பதற்காக வாகனத்தையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்!” என்று யோசனைக் கூறினார். அப்பெண்மணியும் நபி (ஸல்) அவர்களிடம் வாகனம் கேட்கவே நபி (ஸல்) அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய அப்பெண்மணி தனது சகோதரரைத் தேடி ஷாம் நாட்டிற்குப் பயணமானார். அங்கு தனது சகோதரரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை குறித்து விவரித்துவிட்டு “உமது தந்தை செய்திராத நற்செயல்களை எல்லாம் அவர் செய்கிறார். எனவே, விரும்பியோ விரும்பாமலோ நீ அவரைச் சந்தித்தே ஆக வேண்டும்” என்று அறிவுரைக் கூறினார். தனது சகோதரியின் இந்த யோசனைக்குப் பின் தனக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையென்றாலும் துணிவுடன் நபியவர்களை சந்திக்க அவர் பயணமானார்

நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து அவர்களுக்கருகில் அமர்ந்தவுடன், அவர் யார் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் நபி (ஸல்) பேசினார்கள். அல்லாஹ்வை புகழ்ந்ததற்கு பின் “நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன? ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுவதற்கு பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை தவிர வேறொர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் “அப்படி ஒன்றுமில்லை” என்றார். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு “அல்லாஹு அக்பர் என்று சொல்வதற்குப் பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை விட மிகப்பெரியவன் ஒருவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் “அவ்வாறு இல்லை” என்று பதிலளித்தார்.

யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள், கிறிஸ்தவர்கள் வழிதவறியவர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். இதனைக் கேட்ட அதிய் “நான் இணைவைப்பிலிருந்து முற்றிலும் விலகிய முஸ்லிமாக இருக்கிறேன்” என்று கூறினார். அவன் இப்பேச்சைக் கேட்ட நபி (ஸல்) முகம் மலர்ந்தவர்களாக அன்சாரி ஒருவன் வீட்டில் விருந்தாளியாக, அவரைத் தங்க வைத்தார்கள். அவர் அங்கு தங்கி ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து வந்தார். (ஜாதுல் மஆது)

இறுதிப் படை

🔴  தற்பெருமையும் அகம்பாவமும் கொண்ட ரோமானியர்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களின் வாழ்க்கைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் ஆளுநராக மஆன் பகுதியிலுள்ள ஃபர்வா இப்னு அம்ர் ஜுதாமி இஸ்லாமை ஏற்றபோது அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்ற நிகழ்ச்சியை முன்னர் விவரித்துள்ளோம்.

ரோமர்களின் இந்த அடக்குமுறைகளையும் அத்துமீறலையும் முடிவுக்கு கொண்டுவர பெரும் படை ஒன்றை ஹிஜ்ரி 11ல் நபி (ஸல்) தயார்படுத்தினார்கள். ரோமன் கட்டுப்பாட்டிலுள்ள ஃபலஸ்தீன் பகுதியின் ‘பல்கா“, ‘தாரூம்’ எல்லைகள் வரைச் சென்று எதிரிகளை எச்சரித்து வருமாறு அந்தப் படைக்கு ஆணையிட்டார்கள்.

எல்லைகளில் வசித்து வந்த அரபியர்களின் உள்ளங்களில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது நம்பிக்கையை வரவைப்பதற்காகவும், கிறிஸ்துவ ஆலயங்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையை தகர்ப்பதற்காகவும், இஸ்லாமை ஏற்றுக் கொள்வது ஆபத்துகளையும் மரணத்தையும் தேடித் தரும் என்று எவரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவும் இப்படை அனுப்பப்பட்டது.

இப்படையின் தளபதி வயது குறைந்தவராக இருப்பதைக் குறித்து மக்கள் பலவாறாகப் பேசினர். அவருடன் புறப்படத் தயங்கினர். இதைக் கண்ட நபி (ஸல்) “அவரது தலைமையை இடித்துரைத்தீர்கள் என்றால் இதற்கு முன் அவரது தந்தையின் தலைமையையும் இடித்துரைத் திருப்பீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் தலைமைக்கு ஏற்றவரே! தகுதியானவரே! மக்களில் எனக்கு மிக நேசமானவர்களில் அவரும் ஒருவரே. அவருக்குப் பின் நிச்சயமாக இவரும் எனக்கு நேசமானவர்களில் ஒருவரே. (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மக்களெல்லாம் உஸாமாவின் படையில் சேர்வதற்கு ஆர்வத்துடன் குழுமினர். உஸாமா (ரழி) படையை முழுமையாக ஒழுங்குபடுத்திக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு 8 கி.மீ. தூரத்திலுள்ள ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் தங்கினார். இத்தருணத்தில் நபி (ஸல்) நோய்வாய்ப்பட்டார்கள் என்ற துக்கமான செய்தி கிடைத்தது. அல்லாஹ்வின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதற்காக சற்றுத் தாமதித்தார். இப்படை அபூபக்ர் (ரழி) ஆட்சியின் போது புறப்பட வேண்டிய முதல் ராணுவப்படையாக அமைய வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

நூல் “ரஹீக்” -  ( ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி )

தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி தாருல் ஹுதா சென்னை - 1.

“ஜஸாக்கல்லாஹு ஹைரா”

இந்த  இடத்தில்  ஒருங்கிணைப்பு AbuRiyaz-Gingee

Comments

Popular posts from this blog

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது