இரவுத்தொழகை "20" ரக்அத்துகளா அ‌ல்லது "8" ரக்அத்துகளா ஹதீஸ்க்கள் ஓர் பார்வை


 இரவுத்தொழகை "20" ரக்அத்துகளா அ‌ல்லது "8" ரக்அத்துகளா ஹதீஸ்க்கள் ஓர் பார்வை

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 

1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)

2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 

3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 

4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) 

ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்கு 70 % ஆலிம்கள் மக்களிடத்தில்  தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.

உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்களா

உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம்.  உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஓரு பார்வை,!!!!

அறிவிப்பு 1நூல்முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7682 .

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.   அறிவிப்பவர் : யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரி (ரஹ்)

இது முன்கதிஃயான செய்தி. உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டதாக அறிவிக்கும், யஹ்யா பின் ஸயீத்  அல்அன்ஸாரி, உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!

உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத்  அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல்கள்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் – பைஹகீ, - ஷரஹ் மஆனில் ஆஸார், - முஅத்தா, - அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ

உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

அறிவிப்பு 2 - நூல்: பைஹகீ ஸகீர்-821 .

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம். அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத்

இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.

மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது.

ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.

மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். முஅத்தா-…

ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.

அறிவிப்பு 3 - நூல்: முஅத்தா மாலிக்-303 ,பைஹகீ 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர். அறிவிப்பவர் : யஸீத் பின் ரூமான்

இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அலீ (ரலி) அவர்கள் பெயரால்…

1. நூல்: குப்ரா பைஹகீ-4292 .

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஐந்து இடைவெளியுடன் இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்று அபுல் ஹஸனா அறிவிக்கிறார்.

அபுல் ஹஸனா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர்,  தஹபீ   உள்ளிட்ட அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவரது நம்பகத் தன்மையை எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது

 நூல் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7681 , 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 ரமலானில் மக்களுக்கு இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அபுல் ஹஸனா அறிவிக்கிறார்.

இதன் அறிவிப்பாளர்தொடரில், அலி (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர் இப்னு அபுல் ஹஸனா என்று வந்தாலும் சில பிரதிகளில் அபுல் ஹஸனா என்று வந்துள்ளது. இவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ரமளான் மாதத்தில் அலீ (ரலி) அவர்கள் அறிஞர்களை அழைத்து, அவர்களில் ஒருவரை 20 ரக்அத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். வித்ரு தொழுகையை அலீ (ரலி) அவர்கள் தாமே தொழுவிப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமி.

இதன் அறிவிப்பாளரான அபூ அப்துர்ரஹ்மானிடமிருந்து அறிவிப்பவர் அதா பின் ஸாயிப் ஆவார்.

அதா பின் ஸாயிப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் ஹம்மாத் பின் ஷுஐபு ஆவார்.

தஹபீ, இப்னு மயீன், புகாரி, நஸாயீ, இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை (ஹம்மாத் பின் ஷுஐபை) பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பெயரால்…


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

இந்த கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை. காரணம், எல்லாவற்றிலும் ராவீ-761-அபூஷைபா என்ற இப்ராஹீம் பின் உஸ்மான் தான் இடம்பெறுகிறார். இவர் மிக பலவீனமானவர்.

🔹️இமாம் அஹ்மத்  பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவூத்  ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

🔹️இவர் நம்பகமானவர் அல்ல என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

🔹️இவரைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை என்று புகாரி கூறுகிறார்.

🔹️இவர் நிராகரிக்கப்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.

🔹️பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்படுவதால் இவரை விட்டு விட வேண்டும் என்று நஸாயீ, தவ்லாபி கூறுகின்றனர்.

🔹️இவர் பலவீனமானவர். இவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இவருடைய ஹதீஸை விட்டு விட்டனர் என்று அபூஹாத்தம் கூறுகிறார்.

🔹️இவர் மதிக்கப்பட வேண்டியவர் அல்ல என்று இப்ராஹீம் பின் யஃகூப் ஜோஸ்ஜானீ கூறுகிறார். இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யக் கூடாது என்று ஸாலிஹ் ஜஸரா கூறுகிறார்.

🔹️இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸரா கூறுகிறார்.

🔹️இவர் பலமானவர் அல்ல என்று அபூ அலீ நைஸாபூரி கூறுகிறார்.

🔹️ஷுஃபா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்று அல்அஹ்வஸ் கூறுகிறார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 125

இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க நூல்கள் : 

முஸன்னஃப் இப்னு அபீஷைபா-7692 , அல்முஃஜமுல் கபீர்-12102 , 

அல்முஃஜமுல் அவ்ஸத்-798 , 5440 , 

ஸுனன் குப்ரா பைஹகீ-4286 ,

🔸️உபை பின் கஃ-ப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7684 .

🔸️அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7688 .

🔸️தாவூத் பின் கைஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7689 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

1 )  பார்க்க நூல்: அபூதாவூத்-1375 , 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இருபத்தி நான்காம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.

இருபத்தி ஐந்தாம் நாள் பாதி இரவை தாண்டும் வரை தொழுகை நடத்தினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதால் அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.

இருபத்தி ஆறாம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி ஏழாம் நாள் இரவில் தமது மனைவிகளையும், குடும்பத்தினைரையும், மற்ற மக்களையும் ஒன்று திரட்டி, சஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதற்கு பின் அவர்கள் மீதமுள்ள நாட்களில் தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

அபூதர் (ரலி) அவர்கள் ஃபலாஹ் தவறிவிடும் அளவிற்கு, என்று கூறும் போது அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுபைர் பின் நுஃபைர், ஃபலாஹ் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் சஹர் உணவு என்று பதிலளித்தார்கள்.

இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க நூல்கள்: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7706 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-21447 , தாரிமீ-1818 , இப்னு மாஜா-1327 , அபூதாவூத்-1375 , திர்மிதீ-806 , முஸ்னத் பஸ்ஸார்-4041 , குப்ரா நஸாயீ-1289 , நஸாயீ-1605 , 1364 , இப்னு குஸைமா-2206 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-2547 , குப்ரா பைஹகீ-, ஷுஅபுல் ஈமான்-3007 , 3008 , 3410 ,

2 )  பார்க்க நூல்: மாலிக்-302 , 

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஃஹ்பு (ரலி) அவர்களையும், தமீமுத்தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்அத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள்.

தொழுகையில் நீண்ட நேரம் நிற்பதால் (இயலாது போய்) கம்பின் மீது நாங்கள் சாய்ந்து கொள்ளும் அளவுக்கு நூற்றுக்கணக்கான வசனங்களை ஓதுவார். நாங்கள் சுபுஹின் நேரம் சமீபிக்கும் போது வீடு திரும்புவோம், என ஸாயிப் பின் யஸீத் கூறுகின்றார்கள்.

இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-302 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7671 , குப்ரா நஸாயீ-4670 , ஷரஹ் மஆனில் ஆஸார்-1740 , 1741 , குப்ரா பைஹகீ-4287 ,

 3 )  பார்க்க நூல்:     புகாரி-994 , 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.

4 ) பார்க்க நூல்: முஸ்னத் அபீ யஃலா-1802 ,

ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். மறு நாள் இரவு நாங்கள் பள்ளி வாசலில் கூடினோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்து சுப்ஹு வரை காத்திருந்தோம். (சுப்ஹுக்கு வந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வந்து தொழ வைப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சி விட்டேன்’ என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

🔹️இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32904-ஈஸா பின் ஜாரியா என்பவர் பற்றி இவரின் ஹதீஸ்கள் அந்தளவிற்கு பலமானதல்ல என்று இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார். அபூதாவூத், நஸாயீ ஆகியோர் இவரின் ஹதீஸ்கள் முன்கர் என்று கூறியுள்ளனர். இவ்வாறே இப்னு அதீ அவர்கள், இவரின் ஹதீஸ்கள் மஹ்ஃபூல் அல்ல-முன்னுரிமை பெறும் ஹதீஸ்கள் அல்ல என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் அவர்கள், இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/355, தக்ரீபுத் தஹ்தீப்-1/766)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:


பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1802 , இப்னு குஸைமா-1070 , இப்னு ஹிப்பான்-2409 , 2415 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3733 , அல்முஃஜமுஸ் ஸகீர்-525 ,

…முஸ்னத் அபீ யஃலா-1801 ,


ரக்அத்களின் எண்ணிக்கை இதில் முக்கியம் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளனர்; அவர்கள் காட்டியதை விட அதிகப்படுத்தினால் அதில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குச் சிறந்த வழியை, முழுமையான வழியைக் காட்டவில்லை; அதை நாங்கள் கண்டு பிடித்து விட்டோம்’ என்று கூறும் விபரீதம் இதனுள் அடங்கியுள்ளது.

இதுபற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3:31

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். திருக்குர்ஆன் 4:59

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 5:3

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். திருக்குர்ஆன் 6:153

தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். திருக்குர்ஆன். 6:159

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகின்றீர்கள்! திருக்குர்ஆன் 7:3

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!’ என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. திருக்குர்ஆன் 24:54

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். திருக்குர்ஆன் 33:36

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றிப் பல விதங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர்.

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு வணக்கத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: முஸ்லிம்-3540 (3442)

இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உண்டாக்கினால் அது ரத்துச் செய்யப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: புகாரி-2697 

‘(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). நூல்: நஸாயீ-1578 (1560)

மார்க்கத்தின் பெயரால் வணக்கத்தை உண்டாக்குவதும் அதிகப்படுத்துவதும் குற்றம் என்பதையும், அதனால் சொர்க்கம் கிடைப்பதற்குப் பதிலாக நரகம் தான் கிடைக்கும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது