ஷபே பராஅத் குறித்த தவறான கருத்துகள் மற்றும் அதற்கான விடைகள்

 

ஷபே பராஅத் குறித்த தவறான கருத்துகள் மற்றும் அதற்கான விடைகள்


தவறான கருத்து 1:

இந்த இரவில், நம் பாவங்களை மன்னிப்பதற்காக அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவான்.

✔ விடை:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்“ என்று கூறுவான்“. (புகாரி 1145, முஸ்லிம் 1386)_

தவறான கருத்து 2:

இந்த இரவில் தான் நம்முடைய விதி, வாழ்நாள் மற்றும் ஜீவனம் ஆகியவை விதிக்கப்படுக்கின்றன.

✔விடை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, ”இறைவா! இவன் நற்பேறற்றவனா?அல்லது நற்பேறு பெற்றவனா?” என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு ”இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?” என்று கேட்டு அதற்கேற்ப எழுதப்படுகிறது. அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன. பிறகு அதில் கூட்டப்படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை. (ஸஹீஹ் முஸ்லிம் 5146)

தவறான கருத்து 3:

ஷஃபான் 15 இல் தான் அல்லாஹ்விடம் அமல்கள் எடுத்துக்காட்டப்படும்.

✔விடை:

ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்" என்று கூறப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 5014.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னிலையில் அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன.நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக்காட்டப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்" [திர்மிதி,747; ஸஹீஹ் என அல்-அல்பானி அவர்களால், ஸஹீஹ் அல்-தர்கீப்பில்,1041 வகைப்படுத்தப்பட்டுள்ளது]_

தவறான கருத்து 4:

ஷஃபான் 15ஆம் இரவில் சிறப்பு வணக்க வழிபாடுகள், தொழுகைகள், இன்னும் பல செயல்களில் ஈடுப்பட வேண்டும் மேலும் இதற்கென மேலான நற்கூலி உண்டு.

✔விடை:

ஷஃபான் 15ஆம் இரவு குறித்து எந்தவொரு ஸஹீஹ் ஹதீஸும் இல்லை. எனவே இந்த இரவு, மற்ற இரவுகளை போன்றே ஒரு சாதாரண இரவு தான். மேலும் இந்த இரவில் செய்யப்படும் வணக்கவழிபாடுகள், தொழுகைகள் ஆகியவற்றுக்கும் மற்ற இரவுகளில் செய்தால் என்ன நற்கூலி கிடைக்குமோ அது தான் இந்த இரவில் செய்யப்படும் அமல்களுக்கும் கிடைக்கும்.

தவறான கருத்து  5:

ஷஃபான் 15ஆம் நாள் நோன்பு நோற்றால், சிறப்பான மற்றும் மேலான நற்கூலி கிடைக்கும்.

✔விடை:

நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.[திர்மிதி,761; அல்-நஸயீ, 2424; அல்-அல்பானி அவர்களால் ஸஹீஹ் என ஸஹீஹ் அல்-தர்கீபில், 1038 வகைப்படுத்தப்பட்டுள்ளது]

தவறான கருத்து  6:

இந்த இரவில், இறந்துப்போனவர்களின் ஆன்மா அவர்கள் குடும்பத்தாரிடம் திரும்ப வரும்

✔விடை:

இந்த விஷயத்திற்கு குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. இறந்துப்போனவர்களின் ஆன்மா இந்த உலகத்திற்கு திரும்பி வரவே முடியாது. இது உண்மையல்ல, மக்களால் இட்டுக்கட்டப்பட்டது. 

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. [திருக்குர்ஆன்  39:42]

தவறான கருத்து  7:

இதனை எத்தனை மக்கள் செய்கிறார்கள் என பாருங்கள். அவர்கள் அனைவரும் செய்வது எப்படி பொய்யாக முடியும்?

✔விடை:

அல்லாஹ் கூறுகிறான், "பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்." [அல் குர்ஆன் 6:116]


எனவே, பெரும்பாலான ஆலிம்கள் செய்கிறார்கள் அதனால் அது உண்மையாக தான் இருக்கும் என நம்புவது பலவீனமான விவாதமாகும்.


நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.! 'என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 106. 

இதுவே உமது இறைவனின் நேரான வழி. சிந்திக்கின்ற சமுதாயத்திற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம். திருக்குர்ஆன்  6:126

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? திருக்குர்ஆன்  45:23

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர யாரும் சிந்திப்பதில்லை. திருக்குர்ஆன்  2:269

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது