ரஜப் மாதத்தின் (அமல்களும் - பித்தாத்க்களும்)



ரஜப் மாதத்தின் (அமல்களும் - பித்தாத்க்களும்)

 அல்லாஹ்வின் மாதமான ரஜப் ( رجب‎) மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம்.

 ரஜப் ( رجب‎) : இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும் இது. அத்துடன், அல்லாஹஹ் புனிதமாதமாக்கிய சிறப்புற்ற நான்கு மாதங்களில் ஒரு மாதமாகும்,

 இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.

இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ரஜப் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.

ரஜப் என்ற சொல்லின் வரையறை, "மரியாதை" ஆகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாத்திற்கு முன்பும் அரபிகள் நான்கு மாதங்களில் போர் புரிவதை தடுத்தனர் 

ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடங்கி இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை அனைத்து நபிமார்களின் சமூகத்தாருக்கும் மாதங்களை இவ்வாறு தான் அல்லாஹ் அமைத்தான். வருடத்துக்கு 12 மாதங்கள் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. வானம் பூமி படைக்கப்பட்ட நாள்முதல் இது தான் நடைமுறை என்று அல்லாஹ் சொல்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பன்னிரெண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே, இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன் 9:36)

ஆண்டின் எல்லா மாதங்களிலும் பாவம் செய்வது தடுக்கப்பட்டதுதான். இருப்பினும் இந்த நான்கு புனித மாதங்களில் பாவம் செய்வது மேலும் கடுமையான குற்றமாகும். காலம் மற்றும் இடத்தின் புனிதத்திற்கு ஏற்ப அதில் பாவம் செய்வதும் பெரும் குற்றமாகிவிடுகிறது. எப்படி மக்காவில் பாவம் செய்வது ஏனைய இடங்களில் பாவம் செய்வதைவிட கடுமையானதோ அதுபோன்றே புனித மாதங்களில் பாவம் செய்வதும் கடுமையானதாகும்.

புனிதமான நான்கு மாதங்களாவை,

துல்கஅதா, துல் ஹஜ், முஹர்ரம், ரஜப்ஆகும். (புகாரி:3025)

இந்த மாதத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சுவடுகள் ,

● நக்லா“ போர் ஹிஜ் 2, ரஜப் (கி.பி. 624 ஜனவ) மாதம் நபி (ஸல்) 12 முஹாஜிர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களை ‘நக்லா’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். 

● ‘வாதில் குரா’ 12 பேர் கொண்ட குழு பன்னிரெண்டு நபர்களுடன் ‘வாதில் குரா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரஜப் மாதத்தில் அங்கு எதிரிகளின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து வருவதற்காக நபியவர்கள் ஜைதை அனுப்பி வைத்தார்கள்.

● ‘ஸயத்துல் கபத்’ படைப் பிரிவு  இப்படை ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது.

● தபூக் போர் (ஹிஜ்ரி 9, ரஜப்) (October 630) - தபூக் போரில் முஸ்லிம்கள் வெற்றி

● 583 A.H. ( செப்டம்பர் / அக்டோபர் 1187 ) ரஜப் மாதத்தில் சலாகுத்தீன் அவர்களால் ஜெருசலம் கைப்பற்றப்பட்டது.

ரஜப் மாதத்தில் விசேடமான அமல்கள் உண்டா?

ரஜப் மாதத்திற்கு என்று விசேடமான தொழுகை, நோன்பு உம்றஹ் மற்றும் வேறு எந்த ஒரு விசேடமான வணக்க வழிபாடும் கிடையாது. அவ்வாறு எந்த ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் இடம் பெறவில்லை.

ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு ஹஜர் -றஹிமஹுல்லாஹ்- அவர்கள் ரஜப் மாதம் பற்றி வந்திருக்கக் கூடிய அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று திரட்டி, அவை ஆதாரபூர்வமானவை அல்ல; அவற்றில் பல பலவீனமான செய்திகளாகவும் பெரும்பாலானவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவும் இருக்கின்றன என்று தனது تبيين العجب بما ورد في شهر رجب என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ரஜப் மாதத்தில் முக்கியமான நிகழ்வுகள் ஏதேனும் நடந்ததா?

இம்மாதத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பும் இல்லை. சில முக்கியமான நிகழ்வுகள் நடந்ததாக பலவீனமான கருத்துக்களே இருக்கின்றன. இம்மாதத்தின் முதல் இரவில் நபியவர்கள் பிறந்ததாகவும்,     27ஆவது இரவில் அவர்கள் நபியாக தேர்வு செய்து அனுப்பப்பட்டதாகவும், இன்னும் ஒரு கருத்தின் படி 25ஆவது இரவில் நபியாக அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் ஒரு கருத்தின் படி இம்மாதத்தில் 27ஆவது இரவில் நபியவர்கள் இஸ்ரா, மிஃறாஜ் சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் எந்த ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பும் கிடையாது.

இஸ்ரா, மிஃறாஜ் இந்த மாதத்தின் 27ஆவது இரவில் நடந்ததா? அந்த இரவைக் கொண்டாட முடியுமா?

இஸ்ரா, மிஃறாஜ் எந்த இரவில் நடந்தது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஏனெனில் மிஃறாஜ் நடந்தது உறுதி; அதில் அணுவளவு சந்தேகமும் கிடையாது. நபியவர்களின் மக்கஹ் வாழ்க்கையில் அது நடைபெற்றது. பல நபித்தோழர்கள் அதனை அறிவித்துள்ளார்கள். நபி ﷺ அவர்களோ, நபித்தோழர்களோ எந்த ஒரு செய்தியிலும், இந்த மாதத்தில் இத்தனையாவது இரவில் தான் நடந்தது என்று அறிவித்த எந்த ஒரு  அறிவிப்பும் கிடையாது. பிற்காலத்தில் வந்தவர்கள் இது எந்த இரவில் நடந்தது என்று தங்களுடைய ஆய்வுகளை வைத்து பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். அவற்றில் எதற்கும் உறுதியான ஆதாரம் கிடையாது.

ரபீஉனில் அவ்வலில் நடந்ததாக ஒரு கருத்தும், 

ரஜபில் நடந்ததாக இன்னொரு கருத்தும்,

 ரமளானில் நடந்ததாக மூன்றாவது ஒரு கருத்தும், 

ஷவ்வாலில் நடந்ததாக நான்காவது ஒரு கருத்தும், 

துல்கஃதஹ்வில் நடந்ததாக ஐந்தாவது ஒரு கருத்தும், 

துல்ஹிஜ்ஜஹ்வில் நடந்ததாக ஆறாவது ஒரு கருத்தும்  சொல்லப்பட்டுள்ளது. 

இத்தனை கருத்து வேறுபாடுகள் வருவதற்குப் பிரதானமான காரணம்: இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பதில் பிற்காலத்தில் நபி அவர்களோ நபித்தோழர்களோ கவனம் எடுக்கவில்லை; மாறாக நிகழ்வின் முக்கியத்துவத்தையும் அதிலிருந்து பெறப்படும் படிப்பினைகளையும் மட்டுமே அவர்கள் கருத்தில் கொண்டார்கள் என்பது தெளிவாகிறது. 

அது இன்ன இரவில் தான் நடந்தது என்று நமக்கு உறுதியாகத் தெரிந்தாலும் கூட அந்த இரவை எம்மால் கொண்டாட முடியாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அவர்களின் பாசறையில் வளர்ந்த நபித்தோழர்களோ அந்த இரவைக் கொண்டாடவில்லை; அதில் விசேடமான எந்த ஒரு வணக்கத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை. எனவே அவர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்வது மார்க்கத்தில் நாம் புதிதாக உருவாக்குகின்ற ஒரு பித்அத்தாகவே அமையும். அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். அதற்கு நமக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. மாறாக நபியவர்கள் காட்டாத வழியில் இறைவனை வழங்குவது பாவத்தையே அதிகரிக்கச் செய்யும். நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுப்பதாகவே கருதப்படும். எனவே மார்க்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்வதற்கு முடியுமாக  இருந்த ஒரு விடயத்தை அவர்கள் செய்யவில்லை என்றால் அது மார்க்கம் அல்ல என்பது தான் அர்த்தம். அதனை நாம் செய்வது மார்க்கத்தில் நாம் புதிதாக உருவாக்குவதாகவே அமையும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது மறுக்கப்படும்". இன்னொரு அறிவிப்பில் கூறினார்கள்: "யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு அமலைச் செய்கிறாரோ அது மறுக்கப்படும்". 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்ய முடியுமாக இருந்தும் செய்யாத ஒரு விடயத்தை நாமும் செய்யாமல் விடுவது தான் நபி அவர்களை நாம் பின்பற்றுவதாக இருக்கும். இதனையே நாம் ஸுன்னஹ் தர்கிய்யஹ் என்று சொல்கிறோம். அதாவது நபி ﷺ அவர்கள் விட்டதை விடுவதும் நபி வழியாகும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு உரையிலும் ஆரம்பத்திலே கூறுவார்கள்: வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தையாகும். வழிமுறைகளில் சிறந்தது முஹம்மதின் வழிமுறையாகும். காரியங்களில் மோசமானது புதிதாக (மார்க்கத்தில்) உருவாக்கப்பட்டவை ஆகும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களுக்குக் கூறினார்கள்: உங்களில் எனக்குப் பிறகு வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். அப்போது நீங்கள் எனது வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் கடைவாய்ப் பற்களால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித் அத்தாகும் :

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.

ரஜ்ஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி உள்ள பலவீனமான ஹதீஸ்கள்:

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.'

இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) தனது 'அல்இலலுல் முதனாஹியா' என்ற கிரந்தத்தில் இந்த ஹதீஸின் அற்விப்பாளர் தொடர் பலவீனமானது என குறிப்பிடுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்' யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய 'ஸாஇததிப்னு அபிர்ரகாத்' என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி (ரஹ்), மற்றும் இமாம் நஸாயி (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை'

இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).

ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி புணைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள்:

ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).

ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.' 

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப், பக்கம்: 17).

ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.'

(தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது, பக்: 439).

எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்'

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).

ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்'

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20).

ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று, நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால், அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல், அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்'

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 124). தப்யீனுல் அஜப் பக்: 21).

நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்'

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26).

அன்றைய காஃபிர்களிடம் ரஜப் மாதத்திற்கு இருந்த அந்தஸ்து:

அறியாமை காலம் தொட்டே இந்த மாதம் புனிதமானதாக கருதப்பட்டு வந்தது. அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் புனிதப் படுத்தியதனலாகும். நாம் மேலே குறிப்பிட்ட ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் நபியவர்கள் 'ரஜப் முழர்' என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள். காரணம், முழர், ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விடயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர். ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபியவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பது ஒரு காரணமாகும்.

இன்னும் அறியாமை காலத்தில் ரஜப் மாதம் வந்து விட்டால் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக்கூடியவர்களாக இருந்தனர், அந்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை பரவலாக அவர்களிடம் காணப்பட்டது என இப்னு அபித்துன்யா தனது நூலில் குறிப்பிடுகிறார்.

ரஜப் மாதத்தை விஷேச நோன்பு, தொழுகை, உம்ரா ஆகியவைகளின் மூலம் சிறப்பிப்பது பித்ஆவாகும்:

ரஜப் மாதத்தில் விஷேச நோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள் பலவீனமானவை, மற்றும் அதிகமான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவைகள் என்பதை நாம் ஆரம்பத்திலே சுற்றிக்காட்டினோம். எனவே இம்மாத்தில் விஷேச நோன்புக்கோ, தொழுகைக்கோ எந்த ஆதாரமுமில்லை.

இப்னு அபீ ஷைபா தனது முஸன்னப் எனும் கிரந்தத்தில் குறிப்பிடும் போது, 'ரஜப் மாதத்தில் உமர் (ரலி) அவர்கள், மனிதர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டில் வைக்கும் வரை அடிப்பவர்களாக இருந்தார்கள். உண்ணுங்கள் நிச்சயமாக இது அறியாமை காலத்து மக்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு மாதமாகும்.' (முஸன்னப் 3: 203). ஷைகு அல்பானி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என குறிப்பிடுகிறார் பார்க்க: (இர்வாஉல் அலீல் 4:113).

அபூ பக்ர் (ரலி) தனது குடும்பத்தினரிடம் வந்த போது தண்ணீரை நிரப்புவதற்காக ஒரு பாத்திரம் வாங்கி அவர்கள் நோன்புக்காக தயாரக இருந்தனர். அதை பார்த்து அவர் இதென்ன? எனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தினர் ரஜப் மாதம் என்றனர். நீங்கள் ரஜபை ரமழானுக்கு ஒப்பாக்க நினைக்கின்றீர்களா? என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை உடைக்களானார்' 

(அல்முஃனி 3: 167, அஷ்ஷரஹுல் கபீர் 2: 52, மஜ்மூஉல் பதாவா 25: 291).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: 'ரஜப் மாதத்தை வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பதென்பது நூதனமான ஒரு நடை முறையாகும், அதை விட்டு விலகி இருப்பது அவசியமான ஒன்றாகும். ரஜப் மாதத்தில் நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பது வெறுக்கத்தக்க ஒரு விடயம். இமாம் அஹ்மத் (ரஹ்) போன்ற அறஞர்களும் இதே கருத்தில் உள்ளனர்.' (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2: 624, 625). 

முஸ்னத் மற்றும் ஏனைய கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு நபி மொழியில், நபியவர்கள் புனிதமான மாதங்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். புனிதமான மாதங்கள்: ரஜப், துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம். எனவே இம்மாதங்களில் பொதுவாக நோன்பு நோற்பதற்கு அனுமதி உள்ளதே தவிர ரஜப் மாதத்தில் மாத்திரம் விஷேசமாக நோன்புகள் வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. மஜ்மூ பதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) 25: 290, 291).

ரஜப் மாதத்தில் உம்ரா செய்யலாமா?

உர்வதிப்னு ஸுபைர் (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்: 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை.' (புஹாரி).

'அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் உம்ரா செய்தார்கள் என்று கூறிய போது அதை ஆயிஷா (ரலி) அவர்கள் நிறாகரித்தார்கள். அந்த நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மறுப்பேதும் தெரிவிக்காது அமைதியாக இருந்தார்கள்' (புஹாரி, முஸ்லிம்).

ஒரு சிலர் ரஜப் மாத்தில் உம்ரா செய்வது சிறப்பிற்குரிய காரியம் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நாம் மேற்குறிப்பிட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து நபியவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே இதுவும் ஒரு பித்ஆவாகும். 

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித் அத்தாகும் :

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை. 

மிஃராஜ் எந்த வருடம் நிகழ்ந்தது என்பதிலே பல விதமான கருத்துகள் நிலவுகின்றன. அது குறிப்பாக இந்த ஆண்டில், இந்தத்திகதியில் நிகழ்ந்தது என ஆதாரம் இருந்தாலும் அதை சிறப்பிப்பதற்கு நபியுடைய வழிகாட்டல் இல்லாமல் எவருக்கும் சிறப்பிக்க முடியாது. அதையும் மீறி ஒருவர் செய்வாரெனில் அது தெளிவான பித்அத்தாகும் அதற்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைப்பதற்கு பதிலாக அவனது கோபம் தான் கிடைக்கும்.

மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தனர், ஸஹாபாக்கள் வாழ்ந்தனர் நபியவர்களோ, அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு பித்ஆவாகும். 

நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்). 

அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி செய்யப்படும் அமல்களுக்கு மாத்திரம் தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் தூதர் காட்டித் தராத விடயங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த பெறுமதியுமில்லை அவைகள் நிராகரிக்கப்படும். எனவே பித்அத்துக்களை விட்டு எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருப்போமாக.

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது