ரமளான் மாதம் கலீஃபா அலி (ரலி)அவர்களின் மறைவு நினைவு நாள்,



இஸ்லாமிய வரலாற்றின் காலச்சுவடு. அமீருல் முஃமினீன்

(நம்பிக்கையாளர்களின் தளபதி)

அலீ இப்னு அபீ தாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)

அவர்களின் மறைவு நினைவு நாள்,

ஹிஜ்ரி 40 ரமளான் 17 வெள்ளிக்கிழ‌மை பஜர் தொழுகையின் போது, அலி (ரலி), முஆவியா (ரலி), மற்றும் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) ஆகிய மூன்று பேரையும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் கொலை செய்ய திட்டம்.

நஹர்வான் யுத்தத்திற்குப் பிறகு உயிர் பிழைத்த காரிஜிய்யாகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்காவிற்கு வந்து அங்கு தஞ்சமடைந்து கொண்டார்கள். மக்காவை சிரியத் துருப்புக்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சமயத்தில், மக்காவாசிகள் முஆவியா (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்து கொண்டார்கள் அல்லவா, பின்னர் சிரியாவாசிகளை அலி (ரலி) அவர்களின் படைகள் மக்காவிலிருந்து துரத்தி விட்ட பொழுது மீண்டும் மக்காவாசிகள் அலி (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்து கொண்டார்கள். இந்த நடைமுறையில் கூட காரிஜிய்யாக்கள் வித்தியாசமான முறையில் அணுகினார்கள்.., என்ன இவர்கள் பைஅத் என்ற நடைமுறையைக் கேலிக் கூத்தாக அல்லவா ஆக்குகின்றார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை இந்தப் பூமியில் நிலைநிறுத்துவதை விட்டு விட்டு, தங்களது சுய ஆதிக்கத்தை அல்லவா நிலைநாட்ட இந்த மக்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று கருதத் தலைப்பட்டார்கள். எனவே, யார்யாரெல்லாம் அதிகாரத்திற்காக வேண்டிப் போராடுகின்றார்களோ, அவர்கள் அனைவரும் பாவம் செய்து விட்டவர்கள் என்று கருதினார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்றால், இந்தப் பூமியில் யார்யாரெல்லாம் அதிகாரத்திற்காகப் போராடுகின்றார்களோ, அவர்கள் அனைவரையும் கொலை செய்வது கூடத் தகும் என்று அவர்கள் தங்களுக்குள் அதற்காக நியாயத்தைக் கற்பித்துக் கொண்டார்கள். எனவே, முதலில் மூன்று முக்கிய நபர்களைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்றதொரு சதித்திட்டதைத் தீட்டினார்கள் : அந்த மூவர் : அலி (ரலி), முஆவியா (ரலி), மற்றும் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) ஆகியோர்கள் ஆவர்.

மக்காவில் ஒன்று கூடிய காரிஜிய்யாக்கள், கஃபாவிற்கு வந்து சங்கமித்தார்கள். இந்த திட்டத்தினை நிறைவேற்றிடுவதற்காக மூன்று இளைஞர்களை அவர்கள் நியமித்தார்கள்.

🔹️பர்க் பின் அப்துல்லா என்பவர், முஆவியா (ரலி) அவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக நியமிக்கப்பட்டார்.

🔹️அம்ர் பின் அபுபக்கர் என்பவர், 
அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களைத் தீர்த்துக் கட்ட நியமிக்கப்பட்டார்.

🔹️ அப்துர் ரஹ்மான் பின் மல்ஜம் அல் சரிமி என்பவர், 
கூஃபாவில் இருக்கும் அலி (ரலி) அவர்களைத் தீர்த்துக் கட்ட நியமிக்கப்பட்டார்கள்.

இந்த இளைஞர்கள் தங்களது வாட்களை நன்கு கூர் தீட்டிக் கொண்டதோடு, அதில் விஷத்தையும் தோய்த்து எடுத்துக் கொண்டார்கள். பின்னர், அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்காக, விலங்கு தன்னுடைய இரையைத் தேடிப் புறப்படுவது போல புறப்பட்டார்கள். அவர்கள் ரமளான் பதினேழாம் நாள் வரைக்கும் காத்திருந்தார்கள், அந்த நாள் வந்ததும் மூன்று பேரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுதற்குரிய தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முஆவியா (ரலி) மற்றும் அவர் மீதான கொலைத் திட்டம்

டமாஸ்கஸ் (சிரிய) பள்ளியில் பஜ்ர் தொழுகையை முஆவியா (ரலி) அவர்கள் இமாமாக முன்னின்று நடத்திக் கொண்டிருந்த பொழுது, பர்க் பின் அப்துல்லா முஆவியா (ரலி) அவர்கள் மீது பாய்ந்தார். அவர் அவ்வாறு பாய்ந்த மாத்திரத்திலேயே அவரை மக்கள் பிடித்துக் கொண்டார்கள். பிடித்த அந்த நிமிடத்திலேயே அவரது காலும், நாவும் வாளால் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் பல சித்ரவதை நடவடிக்கைகளை அவர் மீது கையாண்டு, பின்னர் அவர் அந்த சித்ரவதையிலேயே உயிரை விட்டார்.

முஆவியா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட காயம் ஆபத்தானதொன்றல்ல. மேலும், அந்த காயத்தை ஆற்றுவதற்கு இரண்டு வழிகளை அவரது மருத்துவர் கூறினார், ஒன்று அந்த காயத்தின் மீது சூடு போட்டு குணப்படுத்துவது, இரண்டாவது விஷத்தை முறிப்பதற்குக் கசாயம் குடிப்பது. கசாயம் குடிப்பதன் மூலம் காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த உறுப்பு செயலிழக்க நேரிடலாம் என்ற கருத்தையும் அந்த மருத்துவர் கூறி, ஏதாவது ஒரு மருத்துவ முறையைத் தேர்வு செய்யும்படிக் கூறினார். முஆவியா (ரலி) இரண்டாவது மருத்துவ முறையைத் தேர்வு செய்தார். மருத்துவ சிகிச்சைக்குப் பின் சில நாட்களில் குணமடைந்தார். அவர் குணமடைந்ததன் காரணமாக, காரிஜிய்யாகளின் திட்டம் தவிடு பொடியானது.

அம்ருப்னுல் ஆஸ் (ரலி) மற்றும் அவர் மீதான கொலைத் திட்டம்

ஃபுஸ்தாத், பிரதான பள்ளியில் வைத்தே அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை கொலை செய்வதற்காக அம்ர் பின் பக்ர் அவர்கள் தயாராகின்றார்கள். அன்றைய தினம் அவருக்கு நல்லதொரு அதிர்ஷ்டமான நாள் போலும், அவருக்கு வயிற்று வலி கண்டிருந்த காரணத்தால், அவர் அன்றைய தின பஜ்ர் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு வரவில்லை. அவருக்குப் பதிலாக கர்ஜா பின் ஹுதஃபா என்ற அவரது பிரதிநிதி தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தினார். இதற்கு முன் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை அந்தக் கொலையாளி பார்த்திராததால், கர்ஜா அவர்களை அம்ரு என நினைத்துக் கொண்டு, விஷம் தோய்ந்த வாளைக் கொண்டு அவரை வெட்டினார். அம்ர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு, அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார். கர்ஜா அவர்களைக் கொலை செய்ததன் காரணமென்ன என்று அவரிடம் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் வினவினார்கள். அதற்கு, உண்மையில் நான் உங்களைத் தான் கொலை செய்ய வந்தேன், கர்ஜா அவர்களை நீங்கள் என நினைத்து அவரைக் கொன்று விட்டேன் என்று கூறினார். அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் உத்தரவின் பேரில், சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை கொலை செய்யும் திட்டமும் நிறைவேறாமல் முடிவுக்கு வந்தது.

அலி (ரலி) அவர்களைப் படுகொலை செய்யப்படுதல்

அலி (ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக நியமிக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் அல் சரிமி அவர்கள் குறிப்பிட்ட அந்த நாளுக்கு முன்பதாகவே கூஃபாவிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். வந்தவுடன் இவர், காரிஜிய்யாக்களைச் சேர்ந்த கதவ்ம் என்ற பெண்மணி மீது காதல் வசப்பட்டு விடுகின்றார். மிக அழகு வாய்ந்த இந்தப் பெண்மணியின் தகப்பானாரும், சகோதரரும் நஹர்வான் யுத்தத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களது படுகொலைக்கு வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளது எண்ணத்தில் எப்பொழுதுமே கனன்று கொண்டிருந்தது. அலி (ரலி) அவர்களின் தலையைத் துண்டித்து என் முன் கொண்டு வந்து, அதனை மஹராக - திருமணக் கொடையாகக் கொடுத்து என்னை மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று அப்துர் ரஹ்மானிடம் கூறி விட்டாள். ஏற்கனவே, இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காகவே வந்திருக்கின்ற அப்துர் ரஹ்மான் உடனே அவளது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், அலி (ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக அப்துர் ரஹ்மானுடன் இன்னும் இரண்டு காரிஜிய்யாக்கள் இணைந்து கொண்டார்கள். அவர்களில் ஒருவர் வெர்தன், இவர் கதவ்ம் என்ற அந்தப் பெண்மணியின் உறவுக்காரர், இன்னொருவர் ஷவ்பிப் பின் பிஜ்ரா.., இவர் அன்ஜா என்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

ரமளான் மாதம் பதினேழாம் நாள், சூரியன் உதிக்காத அதிகாலை பஜ்ர் வேளை, இந்த மூன்று சதிகாரர்களும் அலி (ரலி) அவர்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார்கள். அலி (ரலி) அவர்கள் உள் நுழையும் பிரதான அறையில் அவரை எதிர்நோக்கி அவர்கள் நின்று கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பள்ளிவாசலுக்குள் அலி (ரலி) அவர்கள் நுழைகின்றார்கள், அந்த அதிகாலை வேளையில் வெளிச்சம் எதுவும் இருக்கவில்லை, இன்னும் பள்ளிவாசலுக்கு மக்கள் வரவே ஆரம்பிக்கவில்லை. அலி (ரலி) அவர்கள் பள்ளிக்குள் வந்து தொழுகைக்காக தக்பீர் கட்டியவுடன், வெர்தன் என்பவர் அலி (ரலி) அவர்கள் மீது ஓங்கி வெட்டினார், அந்த வெட்டு சரியாகப்படாமல் இலக்கு தவறியது. பின்னர் அப்துர் ரஹ்மான் தனது விஷம் தோய்ந்த வாளைக் கொண்டு அலி (ரலி) அவர்களின் முன்நெற்றியில் வெட்டினார், ஏற்கனவே அவரது தலையில் காயம் பட்டிருந்ததால், அந்தக் காயத்தின் வழியாக வெட்டு அவரது மூளையைப் பதம் பார்த்தது. அதன் பின்னர், கொலையாளிகள் பள்ளிவாசலை விட்டும் வெளியேறி ஓடி விட்டார்கள்.

தொழுகையாளிகள் ஒருவர் பின் ஒருவராக பள்ளிவாசலுக்குள் வர ஆரம்பித்த பொழுது தான், உள்ளே அலி (ரலி) அவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்க்க ஆரம்பித்தார்கள். கொலையாளிகள் யாராக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. வெர்தன் பிடிபடாமல் போக்குக் காண்பிக்கவே அவரை மக்கள் கொலை செய்து விட்டார்கள். அப்துர் ரஹ்மான் பிடிக்கப்பட்டு, கைதியாகப் பிடிக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டார். மூன்றாவது ஆள் கூஃபாவை விட்டும் தப்பிச் சென்று விட்டார். அப்துர் ரஹ்மான் தனது கொலைத் திட்டத்தைக் கூறி, குற்றத்தை ஒப்புக் கொண்டார். இறைவனது திருநாமத்தைக் கொண்டு தான் நான் அவர் மீது எனது தாக்குதலை ஆரம்பித்தேன், இவர் தனது அதிகாரப் போட்டிக்காக ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து பாவியாகி விட்டவர் என்பதால் தான் அவரைக் கொலை செய்தேன் என்றும் கூறினார்.

தவறாக வழிகாட்டப்பட்டதை அவருக்கு உணர்த்திய அலி (ரலி) அவர்கள் அவரைச் சாபமிட்டார்கள். பின்னர், அவர் மீது எந்த சித்ரவதைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, அவரைப் பாதுகாப்பாக வைக்கும்படி அலி (ரலி) அவர்கள் தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள். நான் இறைவன் உதவியால் பூரண குணமடைந்து விட்டால், அவருக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கின்றேன். ஆனால், நான் குணமடையாமலேயே இறந்து விட்டால், கொலையாளி தன்னுடைய உயிரை இழக்கட்டும் என்று கூறி விட்டார்கள். இன்னும் அவரை ஒரே வெட்டால் கொலை செய்யப்பட வேண்டும், அவரது பாகங்களைச் சிதைக்கவோ அல்லது சித்ரவதையின் காரணமாகவோ அவர் மரணத்தைத் தழுவும் நிலைக்கு ஆளாக்கவும் கூடாது என்றும் அலி (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அலி (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட காயம் அவரது உடல் நிலையை வெகுவாகவே பாதிக்க ஆரம்பித்தது. அலி (ரலி) அவர்களின் உடலில் பாய்ச்சப்பட்ட விஷத் தன்மையை முறிக்கக் கூடிய மாற்று மருந்து எதுவும் வேலை செய்யவில்லை. நாளுக்கு நாள் அலி (ரலி) அவர்களின் உடல் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. ஹிஜ்ரி 40 ரமளன் 20 ஞாயிற்றுக்கிழமை இரவு ஜனவரி மாதம் 24 ம் தேதி கி.பி.661 ல் அலி (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அலி (ரலி) அவர்களின் உடலை இரவோடு இரவாக விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டும் எடுத்துச் சென்று அடைக்கலம் செய்து விட்டார்கள் அடக்கத்தளம் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய அவர்கள். யார் என்றும் யாருக்கும் தெரியாது அலி (ரலி) அவர்களுக்கு பல விதங்களிலும் எதிரிகள் இருந்தார்கள், அவரது உடல் கண்ணியக் குறைவாக இழிவுபடுத்தப்பட்டு விடுமோ என்று அச்சம் கொண்டார்கள். இன்று வரை அலி (ரலி)  அவருடைய அடக்கஸ்தலம் எங்கே உள்ளது என்று யாருக்கும்  தெரியாது,






Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது