நவீன மது - போதைப் பொருட்களும் இஸ்லாமும் -முஸ்லிம்களும்



நவீன மது - போதைப் பொருட்களும் இஸ்லாமும் - முஸ்லிம்களும்

இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் மதுப் பாவனை ஒரு சதாரண ஒன்றாகவே காணப்படுகின்றது. அதன் தீய விளைவு பற்றியோ, அதை உபயோகிப்பதால் கிடைக்கவிருக்கின்ற இறை தண்டனை பற்றியோ, இஸ்லாமிய மார்க்கத்தில் மது பாவிப்பவருக்கு என்ன தண்டனை என்பது பற்றியோ சிந்திக்காமல் விரும்பியவர் பாவிக்கலாம், விரும்பாதவர் விட்டு விடலாம் என்றளவில்தான் காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி மதுபானம் அருந்துவதுதானே மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ளது, வேறு பெயர்களில் நவீன கண்டுபிடிப்பாளர்களினால் சமுகத்தை சீர்கெடுக்கவென தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகிக்கலாம்தானே என்று இன்றைய சமூகம் அப்பொருட்களைப் பாவிப்பதால் ஏற்படும் உடல், உள ரீதியான பாதிப்புக்களை அறியாமலும், சமூகத்தில் தம்மோடு உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை உணராமலும், குறித்த போதைப் பொருட்களை உபயோகிப்பதால் தான் அதை விட்டும் மீள முடியாமல் தனது பொருளதாரமும் அழிந்து தானும், தன் தயவில் வாழும் மனைவி மக்களும் கஷ்டமான நிலைமைக்கு தள்ளப்படுவதை உணராமலும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி பாவிப்பதற்கு அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாமல் தாம் என்ன செய்கிறோம் என்பது கூடப் புரியாமல் தற்கொலை முயற்சி செய்யக்கூடிய நபர்களையும் நாம் காண்கிறோம்.

மது என்றால் என்ன?

இங்கு மது என்பதைக் குறிக்கும் சொல் خمر (கம்ர்) என்பதாகும். அச்சொல்லின் மொழி அர்த்தம் 'மூடுதல்', 'மறைத்தல்', 'திரையிடுதல்' என்பதாகும். அதாவது அது புத்தியை மறைக்கிறது. புத்தியில் தெளிவின்மையை ஏற்படுத்துகின்றது. மது தடை செய்யப்பட்டதற்கான முக்கியமான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். போதை புத்தியை மறைக்கின்றது; மழுங்கடிக்கின்றது; நீக்குகின்றது. போதையை ஏற்படுத்தும், புத்தியை மழுங்கடிக்கும் அனைத்து வகைப் பொருட்களும் எந்த வடிவத்தில் உட்கொள்ளப்படுபவையாக இருந்தாலும் அவை இஸ்லாத்தில் மேற்படி ஆயத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளன. சில போதைப்பொருட்கள் மதுவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றினதும் பாதிப்பு அதிகமாக இருக்கும் அளவுக்கு ஹறாத்தின் தன்மையும் அதிகரிக்கும்.

நம்முடைய இக்காலத்தில் மதுவும், போதைப் பொருள்களும் பல்வேறு வகைகளில் காணக் கிடைக்கின்றன. அரபியிலும் வேறு மொழிகளிலும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுவை-கள் என்றும், சாராயம் என்றும், விஸ்கி, பீர், பிராந்தி, ஒயின், ரம், ஆல்கஹால், வோட்கா (Vodka), அரக் (Arrack), ஷாம்பேன் (Chanpagne) என்றெல்லாம் கூறிக் கொள்கின்றனர்.

‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ 
(நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி) நூல்:இப்னுமாஜா)

என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக ‘உற்சாகமூட்டும் பானங்கள்’ எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். 

அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை” அல்குர்ஆன்: 2:9.

இவ்விஷயத்துக்கு முடிவு கட்டக்கூடிய, விளையாட்டுத்தனமான இத்தகைய குழப்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கக்கூடிய மாபெரும் சட்டத்தை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. அது பின்வரும் நபிமொழியில் இவ்வாறு உள்ளது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம்-4077

மதுவின் நன்மைகளை விட கேடுகள் அதிகம்,!

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:219.)

இந்த அடிப்படையில் இன்று சமூகத்திற்கு மிக ஆபத்தாக இருக்கின்ற ஹெரோயின், ஐஸ் போன்ற போதை வஸ்த்துக்களை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். மட்டுமன்றி நமது பொறுப்பிலுள்ள இளைஞர்கள், உறவினர்களை அதில் விழுந்துவிடாமல் அவர்களுக்கு அறிவூட்டி அவர்களைக் காப்பாற்றுவதும் காலத்தின் தேவையாகும்.

மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட கால கட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. 

மது படிப்படியாக ஹராமாக்கப்பட்ட்டது,!

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: எடுத்த எடுப்பிலேயே நீங்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் அருளப்பட்டிருந்தால் மக்கள் நாங்கள் ஒரு போதும் மதுவைக் கைவிட மாட்டோம் என்று கூறியிருப்பார்கள். (ஆகவே தான் அல்லாஹ் படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.) நூல்: புகாரி-4993

எப்போதும் குடி போதையில் இருந்த அம்மக்களுக்கு குடிப்பது முதலில் தடுக்ப்படாகாமல் இருத்தது.

இஸ்லாத்தின் ஆரம்பத்தில் மது தடை செய்யப்படவில்லை

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. அல்குர்ஆன் 16:67

பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின

போதையாக இருக்கும் போது தொழக் கூடாது என்ற கட்டளை

அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார் (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!’ (அல்குர்ஆன்:4:43) என்ற வசனம் இறங்கியது. அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: அபூதாவூத்-3186

தொழகையின் போது போதையாக இருக்கக் கூடாது என்றால் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன் குடிப்பதை நிறுத்த வேண்டும். ஐந்து வேளைத் தொழுகையின் போதும் இவ்வாறு நிறுத்துவதால் குடிப் பழக்கம் பெருமளவு குறைந்தது.

பின்னர் குடிக்காமல் இருப்பதே நல்லது என்ற கட்டளை பிறபிக்கப்பட்டது. (பார்க்க – 2 : 219)

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:219.)

அதன் பின்னர் அறவே போதை கூடாது என்று முழுமையாகத் தடை செய்யப்பட்டது. 

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! 

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன்:5:90,91.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம்-4077

மதுபான வியாபாரம் தடை செய்யப்ப பட்டடுள்ளது

(முழு மது விலக்கு வருவதற்கு முன்பு ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் மதுவிலக்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக் கூடும். எனவே எனவே தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று அதன் மூலம் பயனடைந்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

சிறிது காலம் கூட கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டான். எனவே தம்மிடம் மது வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால் மதுவை அவர் அருந்தவும் வேண்டாம். விற்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டி விட்டனர். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-3219

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறியதாவது : மக்கா வெற்றி ஆண்டில் நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தபோது, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்துவிட்டார்கள்’ என்று அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். நூல் : புகாரி-4296

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அதை விற்றுவிடச் சொன்னேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.   அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்-3220

மதுவுடன் சம்பந்தப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்து ஒரு மனிதன் மதுவுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறது.

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா-3371(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா அஹ்மத், இப்னு ஹிப்பான் ஹாகிம் ஆகிய கிரதங்களில் வந்துள்ளது.)

மதுபானத்தை வேறு பொருளாக மாற்றுவது கூடாது

நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்-4014

மதுவை மருந்தாகவும் கூட பயன்படுத்தக் கூடாது

நபி (ஸல்) அவர்களிடம் தரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “அது மருந்தல்ல! நோய்” என்றார்கள். அறிவிப்பவர்: வாயில் பின் ஹ‚ஜ்ர்(ரலி) நூல்: முஸ்லிம்-4015

கலந்து ஊற வைத்து பருகக் கூடாது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள். நூல் : முஸ்லிம்-4019

தனித் தனியாக ஊற வைத்து பருகலாம்

உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : முஸ்லிம்-4019

நபீத் அருந்துவதற்குரிய கால அளவு   

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையில் உலர்ந்த திராட்சை ஊறவைக்கப்படும். அதை அன்றைய தினமும் மறுநாளும் அதற்கடுத்த நாளும் அவர்கள் அருந்துவார்கள். மூன்றாவது நாள் மாலையில் தாமும் அருந்துவார்கள்; (யாருக்கேனும்) அருந்தவும் கொடுப்பார்கள். பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் அதைக் கொட்டி விடுவார்கள். நூல் : முஸ்லிம்-4045

மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களை தடைசெய்யப்பட்டது 

மதுவைப் பற்றி மக்களுக்கு ஞாபகம் கூட வந்து விடக் கூடாது என்று கருதிய இஸ்லாம் மது பானங்கள் தயாரிப்பதற்கு அரபுகள் பயன்படுத்தி வந்த பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை செய்திருந்தது. ஏனென்றால் மதுவை மறப்பதற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மது பாட்டில்கள் அங்கு இருந்தால் அந்தப் பயிற்சி பலனற்று போய்விடும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும்,பழுக்காத பச்சை நிறமுள்ள பேரீச்சம் பழங்களை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்க வேண்டாம் என்றும் தடை செய்தார்கள். நூல்:முஸ்லிம்-4044

பாத்திரங்களுக்கான தடை நீக்கப்பட்டது. ஆனால் போதையூட்டும் அனைத்தும் ஹராம்

மக்கள் மதுவை மறந்து, அதை வாங்கிக் கொடுத்தாலும் குடிக்க மாட்டார்கள் என்ற நிலையை அடையும் போது அந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோல் பாத்திரம் தவிர வேறெதிலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்திருந்தேன். இனி, எல்லாப் பாத்திரங்களிலும் (ஊற்றி வைத்து) அருந்திக் கொள்ளுங்கள். போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள். அறிவிப்பவர் ; புரைதா (ரலி) நூல் : முஸ்லிம்-4066

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்.) பாத்திரங்கள் -அல்லது பாத்திரம்- எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை; எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே,) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர் ; புரைதா (ரலி) நூல் : முஸ்லிம்-4067 

எதிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் போதை ஏற்படுத்தினால் அது ஹராம் ஆகும் 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு “அல்மிஸ்ர்” என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து “பித்உ” எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப்படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று (பொது விதி) கூறினார்கள். நூல் : முஸ்லிம்-4073 

மது அருந்தும் போது இறைநம்பிக்கை இல்லை 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது. அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) நூல் : புகாரி-6810

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் விபசாரம் புரியும்போது முஃமினாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது முஃமினாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது முஃமினாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும் அவன் முஃமினாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான்". இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம் இருந்து கேட்ட அவர்களது மாணவர் இக்ரிமஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

'இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு ஈமான் கழற்றப்படும்?' என்று நான் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இவ்வாறுதான்' என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காட்டிவிட்டு அவற்றை(ப் பிரித்து) வெளியிலெடுத்தார்கள். 'அவன் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டால் அந்த ஈமான் அவனிடம் திரும்பவும் வந்து விடுகிறது' என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோத்துக் காட்டினார்கள். புகாரி: 6809.

தொழுகைகளின் நன்மைகளை அழிக்கும் போதைப் பொருட்கள். நான்கு தடவைகள் போதையை உட்கொண்டவன்: அந்த நேரத்தில் அவனுக்கு மரணம் ஏற்பட்டால் அவனுடைய நிலைமை மிகவும் ஆபத்தானதாகும்.

இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்: நபி ﷺ அவர்கள் பின்வருமாறு கூறுவதை நான் செவிமடுத்திருக்கிறேன்: 

*"யார் இந்த உலகத்தில் போதையை அருந்துகிறானோ அவனது நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் மனம் திருந்தி மன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். ஆனால், மீண்டும் அவன் அதனை செய்தால் (மீண்டும்) அவனது 40 நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் மனம் திருந்தி மன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். ஆனால், மீண்டும் அவன் அதனை செய்தால் (மீண்டும்) அவனது 40 நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் மனம் திருந்தி மன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். எனினும், நான்காவது தடவையும் அவன் அதனை அருந்தினால், 'தீனதுல் கபால்' என்பதிலிருந்து அவனைப் பருகச்செய்வது அல்லாஹ் மீது கடமையாகிவிட்டது."* 'தீனதுல் கபால்' என்றால் என்ன என்று வினவப்பட்ட போது, *"அது நரகவாசிகளின் சீழ்"* என்று பதிலளித்தார்கள்.  (அல்-திர்மிதி (1862), அஹ்மத் (4917) அல்-தபரானி (13448) அல்-ஷாப் (5580) அல்-பைஹாகி 

இதே போன்ற ஒரு ஹதீஸை நபி ﷺ அவர்களிடம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களும் அறிவித்துள்ளார்கள் அகமது 6644, அல்-நசாய் 5670. அல்-அல்பானி மற்றும் வெஷ் அல்-அர்னாவுட் ஆகியோரால் சஹீஹ் என வகைப்படுத்தப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கும் மற்றுமொரு ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரே ஒரு முறை போதையின் காரணமாக தொழுகையை விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் சொந்தமாக இருந்து, அவை அவனிடம் இருந்து பறிக்கப்பட்டதைப் போன்ற நிலைமையாகும். எவன் போதையின் காரணமாக நான்கு தடவைகள் தொழுகையை விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு 'தீனதுல் கபால்' என்பதிலிருந்து அருந்தச்செய்வது கண்ணியமிக்க அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது...*   அஹ்மத் 6659, அல்-ஹக்கிம் 7233 மற்றும் அல்-அவ்சாத் 6371 அல்-தபரானி. 

என் சமுதாயத்தில் மது அருந்தும் ஒருவனின் நாற்பது நாட்களின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : நஸாயீ, அஹ்மத்

போதை அருந்தியவனுக்குக் கிடைக்கின்ற தண்டனைகளில் ஒன்று: அவன் ஒரு முறை உட்கொள்ளும் போதையின் காரணமாக நாற்பது நாட்கள் அவன் தொழுத தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகும். 40 நாட்களில் அவன் தொழுத அனைத்து தொழுகைகளுக்கு குரிய நன்மைகளை இழந்துவிடுவான். அவனது கடமை நிறைவேறுமே தவிர அதற்குரிய நன்மை கிடைக்காது. பலன் கிடைக்காது என்பதனால் தொழாமல் இருக்கவும் முடியாது. ஏனெனில், தொழாவிட்டால் கடமையைச் செய்யாததற்கான தண்டனையும் கிடைக்கும். 

இந்த உலகத்தையும் அதிலுள்ள சொத்து செல்வங்களையும் கணக்கிட்டு விலை மதிக்கமுடியாது; அவை அனைத்துக்கும் ஒரு மனிதன் இந்த உலகத்தில் உரிமையாளனாகுவதும் சாத்தியமில்லை. அவை அனைத்துக்கும் ஒரு மனிதன் உரிமையாளனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர் அவை அனைத்தும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவனுடைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனைசெய்து பாருங்கள். போதையின் காரணமாக ஒரே ஒரு தொழுகையை விட்டவன் இத்தகைய ஒரு கைசேதத்திற்கு ஆளாக இருக்கின்றான்.

நான்கு முறைகள் போதையை உட்கொண்டவன் 'தீனதுல் கபால்' மற்றும் 'றத்கதுல் கபால்' என்றழைக்கப்படும் நரகவாசிகளின் சீழில் இருந்து உருவான அழிவு தரும் சேற்றிலிருந்து பருகுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவான். நரகத்தில் வழங்கப்படும் பயங்கரமான தண்டனையின் விளைவாக நரகவாசிகளின் உடல்களில் இருந்து ஊனமும் சீழும் வெளியேறி ஆறாக ஓடும். அவ்வாற்றின் பெயர் 'நஹ்ருல் கபால்' என்பதாகும். அல்லாஹ் எம்மை நரகத்தில் இருந்து பாதுகாப்பானாக!

மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: –

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்

மது அருந்துபவனின் மறுமை நிலை  

ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள ‘ஜைஷான்’ எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒரு வகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது போதையளிக்கக்கூடியதா?’’ என்று கேட்டார்கள். அவர் “ஆம்’’ என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், “போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) ‘தீனத்துல் கபாலை’ நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்’’ என்று கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘தீனத்துல் கபால்’ என்பது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்’’ என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் (4075)

அனைத்து போதைப் பொருட்களும் ஹறாமானவை என்பதையும், உலகில் போதையை அருந்தியவன் அல்லாஹ்வின் மன்னிப்பையும் பெறாவிட்டால் அவன் நரகில் நுழைவான் என்பதையும், நரகில் கடுமையான வேதனையின் விளைவாக நரகவாசிகளின் உடம்பிலிருந்து வடியும் அருவருப்பான திரவம் அவனுக்கு குடிப்பதற்காக வழங்கப்பட்டு இழிவாக்கப்படுவான்; தண்டிக்கப்படுவான் என்பதையும் இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வுலகில் மது அருந்தினால் மறுமையில் மது கிடையாது 

உலகத்தில் ஒருவன் மது அருந்திவிட்டு, பாவமன்னிப்புக் கோருவதற்கு முன் அல்லது முறையாக பாவமன்னிப்புக் கோராமல் ஈமானுடன் மரணித்தால், அவன் தனக்குரிய தண்டனையைப் பெற்றுவிட்டு அல்லது அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு சுவனம் நுழைந்தாலும் கூட, அவனுக்கு சுவனத்தில் இருக்கும் மது அருந்தும் இன்பம் கிடைக்கமாட்டாது. சுவனத்தில் சிலவேளை மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு மறக்கடிக்கப்படலாம் அல்லது அதை அருந்த வேண்டும் என்ற ஆசை ஏற்படாமல் செய்யப்படலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் மது அருந்தாதவர்களுக்கும் அருந்தியவர்களுக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுத்தப்படுவதற்காக சுவர்க்கத்தின் மதுவை அவன் சுவைக்கமாட்டான். அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற தண்டனையையும் கூலியையும் வைத்துள்ளான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் ; முஸ்லிம்-4076

மது அருந்தியவனுக்கு மார்க்கத்தின் தண்டனை 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள். அறிவிப்பவர்: முஆவியா (ரலி) நூல்: அபூதாவூத் 3886

நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி) நூல்: அஹ்மத்-18610

(குறிப்பு – குற்றங்களுக்குரிய தண்டனைகள் இஸ்லாமிய அரசால் நிறைவேற்றப்பட வேண்டியவை ஆகும். தனிமனிதர்களுக்கு தண்டனைகளை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது.) 

தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்து கொண்டு மக்களிடம் மதுவை விற்பனை செய்து வருகிறது. பட்டப் பகலில் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் சர்பத்தைக் குடிப்பது போல் மதுப்பிரியர்கள் இந்த விஷத்தைக் குடிக்கிறார்கள்.

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது. எத்தனையோ சமூக ஆர்வலர்களும் மக்கள் நல இயக்கங்களும் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மதுவை மக்கள் மனதிலிருந்து தூக்கி எறிவதற்கு இவர்களால் முடிவதில்லை.

திருக்குர்ஆன் செய்த மருத்துவம்

ஆனால் குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு, எழுத்தறிவில்லாத, காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மதுப் பானைகளை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி அரபு தேசத்தில் உருவானது. இந்தக் கருத்தை நாம் மக்களிடம் கூறினால் இந்த மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்தச் சீர்திருத்தவாதி யார்? அவர் என்ன மருத்துவம் செய்தார்? அவர் சாதாரண ஆளாக இருக்க முடியாது என்றெல்லாம் வியந்து கேட்பார்கள்.

அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்கு, குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புதப் பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோக நோய் தீர சிறந்த மருந்தாக இருந்தது.

மது என்ற கொடிய தீமையைப் பரவ விடாமல் இஸ்லாம் ஒழித்துக் கட்டிய விதத்தை, இன்றைய உலகம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் இந்த உலகம் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் ஆரோக்கியத்தையும் நிரம்பப் பெற்ற உன்னத உலகமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது