மிலாதுந்நபியும் முஸ்லீம்களும் இஸ்லாம் சொல்வது என்னா?


மீலாதுந்நபியும்... முஸ்லீம்களும்... இஸ்லாம் சொல்வது என்னா,?

ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா, இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடம் பரவி விட்ட பித்அத்களில் ஒன்று தான் நபியவர்களுக்கு பிறந்த நாள்  கொண்டாடப்படுகிறது இப்படி கொண்டாடுவது முஸ்லிம்களிடம் நன்மையாக கருதப்படுகிறது இது கூடாது என்பதற்காக விரிவான விளக்கத்தை பார்ப்போம்.

1445 ஆண்டுகளுக்கு  முன் வாழ்ந்துமறைந்த நபிகள்நாயகம் அவர்கள், இந்த உலகத்திற்கு பல நல்லுபதேசங்களை சொல்லிச்சென்றுள்ளார்கள்.

“ஏழைக்கு உணவளி, தாய் தந்தையை பராமரித்துவா, உறவினர்களை ஒன்றிணைத்து வாழ், அண்டை வீட்டாருக்கு இடையூறு தராதே, சக மனிதனை மதிக்கக் கற்றுக்கொள், விதவைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவு, பிரச்னைகள் எங்கேனும் நடந்தால் அதனைத் தீா்த்துவை, நன்மைகளை ஏவு, தீமைகளைத் தடு, அனைவருடனும் சகோதரத்துவத்தோடு பழகு, பெரியவர்களுக்கு மரியாதைகொடு, சிறியவர்களின் மீது அன்புகாட்டு, இரக்ககுணம் கொள், உனக்கு எதை விரும்புகின்றாயோ அதையே பிறருக்கும் விரும்பு, அன்பையும் அமைதியையும் இவ்வுலகுக்கு பறைசாற்று! – இவ்வாறு உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான உபதேசங்களை வாரி வழங்கி, தானும் அவ்வாறே செயல்பட்டார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள்.”

இறைவனுக்கு யாரையும் எதையும் இணைவைக்காதீர்கள், ஐவேளை தொழுகையை தவறாமல் நிறைவேற்றுங்கள், ரமளான் மாதம் நோன்பு வையுங்கள், வசதியிருப்பவர்கள் ஆண்டு வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தர்மம் செய்யுங்கள், வசதியும் ஆரோக்கியமும் வாய்க்கப் பெற்றவர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்லுங்கள் ஆகிய கடமைகளையும், பல உபதேசங்களையும் இறைவன் புறத்திலிருந்து கட்டளைகளாகவும் செய்திகளாகவும் பெற்று நடைமுறைப்படுத்தினார்கள். நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள்.”

இருபத்தி மூன்று ஆண்டுகளாய் இவ்வாறு, ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து, பல நல்ல உபதேசங்களை வாரி வழங்கிச் சென்ற நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், தங்கள் வாழ்வில் ஒருமுறையும் “என்னுடைய பிறந்தநாளை கொண்டாடுங்கள்” என்று சொல்லவில்லை. நபிகள் நாயகத்தின் இறப்புக்குப் பிறகு, அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நபித்தோழர்களில் யாரும் நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது. இஸ்லாமிய வரலாற்றில் ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாக “மிலாடி நபி” என்கிற ஒருபண்டிகையே இல்லை!

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)

ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த மீலாது விழா நான்காம் நூற்றாண்டில் தோன்றியது குறிப்பாக ஃபாதி மிய்யாக்கள் என்று சொல்லப்படக்கூடிய அந்த கூட்டத்தாரால் ஏற்படுத்தப்பட்டதாகும் இவர்களிலுள்ள அறிஞர்கள் இந்த வழிகேட்டை தோற்றுவித்தார்கள் மேலும் பித்அத் மற்றும் வெறுக்கப்பட்ட பல விசயங்களை உருவாக்கினார்கள் எனவே அவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ தகுதியில்லாதவர்களாவார்கள்.

பிந்திய காலத்தில் வந்த சில அறிஞர்கள் இதை நல்லதாக காட்டினார்கள், இதை செய்வதை குற்றமாக கருதவில்லை இந்நிலையில் இது நமக்கு மத்தியில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டது, இப்படி கருத்து வேறுபாடு ஏற்படும் சமயத்தில் நாம் அல்லாஹ் அவனின் தூதரின் பக்கம் செல்லவேண்டும் அப்படி பார்க்கின்ற பொழுது அதில் எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை மேலும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பார்க்கின்றபொழுது அவர்களுடைய பிறந்த தினத்திற்காக எந்தவித விழாவையும் நமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் ஏவவில்லை இன்னும் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த நல்லற தோழர்களாவது இதை செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. நபி(ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார்கள், ஸஹாபாக்கள் நபி அவர்களோடு தோழமை கொண்டார்கள் இன்னும் அவர்களை ஈமான் கொண்டார்கள் அவர்களின் மீது அளவில்லாத அன்பு கொண்டார்கள் இன்னும் அவர்களை கண்ணியப்படுத்தினார்கள் இன்னும் அல்லாஹ் அவனது தூதருக்காக தங்களது உயிர்களை கொடுத்தார்கள் இன்னும் சிறிய விசயங்களிலிருந்து பெரிய விசயங்கள் வரை அனைத்திலும் அவர்களை பின்பற்றி வாழ்ந்தார்கள் அவர்களுடைய சுன்னாவை ஒன்றுவிடாமல் பிறருக்கு எடுத்துச் சொன்னார்கள் எந்த அளவிற்கெனில் தொழுகையின் ஆரம் பத்தில் அவர்கள் அமைதியாக ஓதிய பொழுது அசைந்த தாடியின் அசைவை கூட எடுத்து கூறியுள்ளார்கள். இப்படி வாழ்ந்த அந்த நல்லறத்தோழர்களோடு தாங்கள் வாழ்ந்த அந்த வாழ்நாளில் மீலாது கொண்டாடியாதாக பார்க்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு பின் சிறந்தவர்களாக வாழ்ந்தவர்கள் இன்னும் அவர்களை அன்பு கொண்டவர்களாக இருந்தவர்கள் ஸஹாபா பெருமக்களாவார்கள், அவர்களில் அபூபக்கர் (ரலி) அவர்களோ, உமர்(ரலி)அவர்களோ, உதுமான் (ரலி) அவர்களோ, அலி (ரலி) அவர்களோ இன்னும் ஏனைய ஸஹாபா பெருமக்களோ அல்லது தாபியீன்களோ யாருமே மீலாதை கொண்டாடவில்லை. மேலும் சிறந்த சமுதாயமாக நபியவர்கள் கூறிய மூன்று நூற்றாண்டை சார்ந்த யாருமே மீலாது கொண்டாடவில்லை

எனவே அவர்களுக்கு மார்க்கமாக ஆக்கப்படாத எதையுமே அவர்கள் செய்ததில்லை அப்படி செய்வதன் மூலம் அல்லாஹ் அவனது தூதரின் வெறுப்பைத்தான் பெறமுடியும் என்று விளங்கியிருந்தார்கள் அது மட்டுமல்ல அல்லாஹ் அவனது தூதரின் வழியில் காட்டப்படாத அத்துனை மார்க்க விசயங்களுமே பித்அத் எனக் கருதினார்கள் எனவே நபியவர்களும், அவர்களை தங்களது உயிரினும் மேலாக நேசித்த நல்லறத்தோழர்களும் செய்து காட்டாத புதுமையான வழிமுறையே மீலாது கொண்டாட்டம் ஆகும்.

மீலாது விழா கூடாது என்பது தெளிவாகிறது என்றாலும் சைத்தான் அழகு படுத்தி காட்டியதின் காரணமாக மார்க்கத்தில் இந்த வழிமுறைகள் உண்டாகியுள்ளது, இந்த வழிமுறைகளை அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டவில்லை மாற்றார்களிடமிருந்து அடித்த காப்பியாகும், எனவே இது போன்ற கொண்டாட்டங்களிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும். மேலும் நபியவர்களை புகழ்கிறோம் என்ற பெயரில் நபிகள் நாயகத்தை நேசிக்கின்றோம் என்ற பெயரில், அவரை அளவுக்கு மீறி புகழ்வது, இறைவனின் தன்மைகளை அவருக்கு அளிப்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத செயல்களை முஸ்லிம்களில் பெரும் மக்களால் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மவ்லூதுகள் அன்றைய தினம் ஏற்படுத்தியுள்ள விசேச நிகழ்ச்சிகள் யாவும் அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை புரிந்து எந்த வகையிலும் அதற்கு துணை போகமல் இருப்பதே நமது ஈமானை பாதுகாக்க முடியும் எனவே சிந்தியுங்கள் அல்லாஹ்வின் அருளை பெற்றுத்தரும் காரியங்களில் மட்டும் இணைவோம் அவனது வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகி வாழ்வோம்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மா்யமின் புதல்வர் ஈஸா(அலை) எல்லை மீறி புகழப்பட்டதை போன்று என்னை நீங்கள் எல்லை மீறி புகழாதீர்கள். மாறாக, (என்னைக்குறித்து, நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும், அவனுடைய தூதர் என்று சொல்லுங்கள்.” (நூல்:புகாரி-6830) 

நபிகள்நாயகத்தை உண்மையாக நேசிப்பது என்பது, அவர் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே நம்வாழ்வில் செயல்படுத்துதே ஆகும். அதைவிடுத்து, இஸ்லாமிய மார்க்கம் காட்டித்தராத இந்த பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுவது மிகப்பெரிய தவறாகும். இதனை உடனே கைவிடவும் வேண்டும். முஸ்லிம் அல்லாதோருக்கு மத்தியில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை எடுத்தியம்ப வேண்டும். இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றி அல்லாஹ்வின் அருளுக்கு உரியவர்களாக நாம்மாற வேண்டும்.

“இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகிறாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (நூல்:முஸ்லிம்-3540) 

மீலாது விழாவும் கிரிஸ்மஸும்...!

ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்:அபூதாவூத்)

கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

பிறந்த நாள் விழாவா.? இறந்த நாள் விழாவா.?

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?

மார்க்கத்தில் உள்ள மீலாது விழா...!

ஒரு மீலாது விழா மார்க்கத்தில் உள்ளது. அது வருடத்துக்கு ஒரு தடவை கொண்டாடும் விழா அல்ல. வாராவாரம் கொண்டாடும் மீலாது விழாவாகும்.

திங்கள்கிழமை நோன்பு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் “அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது” என்கிறார்கள்.அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ) (நூல்:முஸ்லிம்-2152) 

திங்கட்கிழமை நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த காரணத்தாலும், அவர்கள் திங்கட்கிழமை தான் நபியாக அனுப்பப்பட்டார்கள் என்பதற்காகவும் வாராவாரம் திங்கட் கிழமை நோன்பு வைக்கலாம். மீலாது கூட்டத்தினர் இதைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்.

இந்த மீலாது கொண்டாடினால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பண்ண முடியாது, பசியோடு இருக்க வேண்டும் என்பதால் இந்த மீலாது பெயர் தாங்கி முஸ்லிம்களுக்குப் பிடிக்காது.

இந்த மீலாதுக்கு ஆலிம்களுக்கு வருமானமும் புலவு சோறும் கிடைக்காது என்பதால் ஆலிம்களுக்கும் இந்த மீலாது விழா கசப்பாக உள்ளது.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக!      திருக்குர்ஆன் 3:31,32

நபியைப் பின்பற்றுவதில் தான் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும் என்று உணர்ந்து நடக்கும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது