நபியவர்களின் குடும்பம்


நபியவர்களின் குடும்பம் 🛖🛖

1) ஹிஜ்ரத்துக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் வீடு மக்காவில் இருந்தது. அதில் நபி (ஸல்), அவர்களின் மனைவி கதீஜா பின்த் குவைலிது (ரழி) இருந்தார்கள். நபி (ஸல்) தங்களது 25வது வயதில் 40 வயது நிரம்பிய கதீஜா (ரழி) அவர்களை மணமுடித்தார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை நபி (ஸல்) வேறு யாரையும் மணமுடிக்கவில்லை. கதீஜா (ரழி) அவர்களின் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பல ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். ஆண் குழந்தைகள் யாரும் உயிருடன் இல்லை. பெண் பிள்ளைகள் ஜைனப், ருகய்யா, உம்மு குல்சூம், ஃபாத்திமா (ரழி) ஆகியோராகும்.

ஹிஜ்ரத்துக்கு முன்பாக அபுல் ஆஸ் இப்னு ரபீஆவுக்கு ஜைனபை நபி (ஸல்) மணமுடித்து வைத்தார்கள். இவர் ஜைனபுடைய சிறிய தாயாரின் மகனாவார். ருகையா, உம்மு குல்சூம் ஆகிய இருவரையும் ஒருவர் பின் ஒருவராக உஸ்மானுக்கு மணமுடித்து வைத்தார்கள். பத்ரு, உஹுதுப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஃபாத்திமாவை அலீக்கு மணமுடித்துத் தந்தார்கள். ஃபாத்திமாவுக்கு ஹசன், ஹுசைன், ஜைனப், உம்மு குல்சூம் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

மற்ற முஃமின்களை விட நபி (ஸல்) அவர்களுக்குப் பல காரணங்களை முன்னிட்டு நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது ஆகுமானதாக இருந்தது. நபி (ஸல்) பதிமூன்று திருமணங்கள் செய்திருந்தார்கள். அதில் கதீஜாவும், ‘ஏழைகளின் தாய்’ என புகழப்பட்ட ஜைனப் பின்த் குஸைமாவும் நபி (ஸல்) உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே மரணித்து விட்டார்கள். ஏனைய ஒன்பது மனைவிகள் உயிருடன் இருக்கும்போது நபி (ஸல்) மரணமானார்கள். மற்ற இரண்டு பெண்களை மணமுடித்து, பிறகு பிரிந்து விட்டார்கள்.

2) ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) - கதீஜா (ரழி) அவர்கள் இறந்து ஒரு மாதத்திற்குப் பின் நபித்துவத்துடைய பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் இவர்களை மணமுடித்தார்கள். ஒன்றுவிட்ட சகோதரன் மகன் சக்ரான் இப்னு அம்ருக்கு இவரை மணமுடித்து தரப்பட்டிருந்தது. அவன் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 54, ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.

3) ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) - ஸவ்தா (ரழி) அவர்களை மணமுடித்து ஓராண்டுக்குப் பின் நபித்துவத்துடைய 11 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில், ஹிஜ்ரத்துக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்களுக்கு முன் ஆயிஷாவை அவரது 6 வது வயதில் மணமுடித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின் ஏழு மாதங்கள் கழித்து ஆயிஷாவின் 9 வது வயதில் அவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரழி) மட்டுமே நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னிப் பெண்ணாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை மிக அதிகம் நேசித்தார்கள். இச்சமுதாயப் பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.

ஏனைய உணவுகளை விட ‘ஸரீத்’ என்ற உணவுக்குரிய சிறப்பைப் போன்று ஏனைய பெண்களை விட ஆயிஷா (ரழி) மிகச் சிறப்புப் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரி 57 அல்லது 58 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17ல் மரணமானார்கள். பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

4) ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி)  - இவரது கணவர் குனைஸ் இப்னு ஹுதாஃபா சஹ்மி (ரழி). பத்ர்-உஹுதுக்கு இடைப்பட்ட காலத்தில் மரணமாகிவிடவே, இவர் விதவையானார். இத்தா முடிந்து, ஹிஜ்ரி 3, ஷஅபான் மாதத்தில் இவரை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டார்கள். ஹஃப்ஸா (ரழி) ஹிஜ்ரி 45ல், ஷஅபான் மாதம் தமது 60வது வயதில் மரணமானார்கள். இவர்களையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.

5) ஜைனப் பின்த் குஜைமா (ரழி)  - இவர் ஹிலால் இப்னு ஆமிர் இப்னு ஸஃஸஆவின் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஏழைகள் மீது அதிகம் இரக்கமும் கருணையும் உடையவராக இருந்ததால் (உம்முல் மஸாகீன்) ‘ஏழைகளின் தாய்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். கணவர் உஹுத் போல் ஷஹீதான பின்பு அவரை நபி (ஸல்) ஹிஜ்ரி 4ல் மணமுடித்தார்கள். மணமுடித்து ஏறக்குறைய 3 மாதங்கள் கழித்து ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவருக்குத் தொழ வைத்து பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.


6) உம்மு ஸலமா ஹிந்த் பின்த் அபூ உமையா (ரழி) - இவர் அபூ ஸலமாவின் மனைவியாக இருந்தார். அந்தத் தம்பதியருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஹிஜ்ரி 4, ஜுமாதா அல்ஆகிராவில் அபூ ஸலமா (ரழி) மரணமானார். அதே ஆண்டு ஷவ்வால் மாதக் கடைசியில் நபி (ஸல்) உம்மு ஸலமாவை மணமுடித்தார்கள். இவர் மார்க்க ஞானமும் நுண்ணறிவும் கொண்ட பெண்ணாகத் திகழ்ந்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 59 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 62) தமது 84வது வயதில் மரணமடைந்தார்கள். இவரையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.

 7) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் இப்னு ருப்ப் (ரழி)  - இவர் அஸத் இப்னு குஜைமாவின் குடும்பத்தைச் சார்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஜைத் இப்னு ஹாஸாவின் மனைவியாக இருந்தார். ஜைத் (ரழி) தலாக் கொடுத்து, இத்தா காலம் முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்கு அவரை அல்லாஹ் மணமுடித்து வைத்ததாக பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

 ‘ஜைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். (அல்குர்ஆன் 33:37)

ஹிஜ்ரி 5 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 4, துல்கஅதா மாதம் நபி (ஸல்) ஜைனப் (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அதிகம் தர்மம் செய்பவராகவும் அதிகம் வணக்கம் புரிபவராகவும் விளங்கினார். தங்களது 53வது வயதில் ஹிஜ்ரி 20ல் மரணமெய்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் நபியை அடுத்து மரணமெய்தியவர்களில் இவரே முதலாமவர். இவருக்கு உமர் (ரழி) தொழுகை நடத்தி பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.

8) ஜுவைய்யா பின்த் அல்ஹாரிஸ் (ரழி) - இவன் தந்தை ஹாரிஸ், குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்தலக் கிளையினரின் தலைவராவார். நபி (ஸல்) பனூ முஸ்தலக் மீது படையெடுத்த போது கைதியான இவர், ஸாபித் இப்னு கைஸ் இப்னு சம்மாஸ் (ரழி) என்ற நபித்தோழருக்கு (கனீமா) வெற்றிப் பொருளில் பங்காகக் கிடைத்தார். இவரைச் சில தொகைகள் பெற்றுக் கொண்டு உரிமையிட ஸாபித் முடிவு செய்தார். அத்தொகையை நபி (ஸல்) செலுத்தி விட்டு ஹிஜ்ரி 6, (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 5) ஷஅபானில் மணமுடித்துக் கொண்டார்கள். இத்திருமணத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவியின் உறவினர்களை எங்ஙனம் அடிமையாக வைத்திருப்பது என்று எண்ணி முஸ்லிம்கள் தங்களிடம் அடிமைகளாக இருந்த நூறு பனூ முஸ்தலக் குடும்பத்தார்கள் அனைவரையும் விடுதலை செய்து விட்டனர். எனவே, தனது சமூகத்தாருக்கு அல்லாஹ்வின் அருள் பொருந்தியப் பெண்ணாக இவர் விளங்கினார். தனது 65வது வயதில் ஹிஜ்ரி 56 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 55) ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார்.

9) உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூஸுஃப்யான் (ரழி) - இவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். அவர் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தை பிறந்ததால் உம்மு ஹபீபா என்றழைக்கப்பட்டார். இவர் தனது கணவருடன் ஹபஷாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார். அங்கு உபைதுல்லாஹ் கிறிஸ்துவராக மாறினார். சில காலத்திற்குப் பின் அங்கேயே இறந்து போனார். உம்மு ஹபீபா (ரழி) இஸ்லாமில் நிலையாக இருந்தார். ஹிஜ்ரி 7, முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமைய்யா ழம்ரீ என்ற தோழரை மன்னர் நஜ்ஜாஷியிடம் அனுப்பி, அங்குள்ள முஸ்லிம்களை அழைத்து வரச் சொன்ன போது உம்மு ஹபீபாவை மணமுடிக்கும் விஷயமாகவும் நஜ்ஜாஷியிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் நபி (ஸல்) குறிப்பிட்டிருந்தார்கள். அவர் நபி (ஸல்) சார்பாக நானூறு திர்ஹங்கள் மஹர் கொடுத்து உம்மு ஹபீபாவை நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்து ‘ஷுரஹ்பீல் இப்னு ஹஸ்னா’ என்ற தோழருடன் அனுப்பி வைத்தார். இக்குழுவினர் நபி (ஸல்) கைபர் போரில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்தனர். போரிலிருந்து திரும்பிய பின் நபி (ஸல்) இவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 42ல் இவர் மரணமெய்தினார். சிலர் ஹிஜ்ரி 44 என்றும், சிலர் 50 என்றும் கூறுகின்றனர்.

10) ஸஃபிய்யா பின்த் ஹய் (ரழி) - இஸ்ரவேலர்களின் பனூ நழீர் கூட்டத்தாருடைய தலைவன் மகள். கைபர் போரில் கைதியானார். இவரை நபி (ஸல்) தனக்காக எடுத்துக் கொண்டு இஸ்லாமுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளவே நபி (ஸல்) அவரை உரிமைவிட்டு கைபரிலிருந்து திரும்பும் போது ஹிஜ்ரி 7ல் மணமுடித்துக் கொண்டார்கள். மதீனாவுக்குச் செல்லும் வழியில் கைபரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் இவருடன் நபி (ஸல்) வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

11) மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி)  - இவர் உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் ஹாரிஸின் சகோதயாவார். நபி (ஸல்) உம்ரத்துல் கழாவை முடித்துத் திரும்பும் போது ஹிஜ்ரி 7, துல்கஅதாவில் இவரை மணமுடித்தார்கள். மக்காவிலிருந்து 9 மைல் தொலைவிலுள்ள ‘சஃப்’ என்ற இடத்தில் இவருடன் நபி (ஸல்) இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 61ல் இதே சஃப் என்ற இடத்திலேயே இவர் மரணமடைந்தார் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். மரணமடைந்த ஆண்டு சிலர் ஹிஜ்ரி 38 என்றும், சிலர் 63 என்றும் கூறுகிறார்கள்.

ஆக, மேற்கூறிய (11) பெண்களை நபி (ஸல்) மணமுடித்து வாழ்க்கை நடத்தினார்கள். இவர்களில் கதீஜா, ஜைனப் பின்த் குஜைமா (ரழி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள். மற்ற மனைவிமார்கள் அனைவரும் வாழும்போது நபி (ஸல்) மரணமானார்கள். இவர்களைத் தவிர, கிலாஃப் குடும்பத்தாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், கிந்தா குடும்பத்தைச் சேர்ந்த ஜுவைனிய்யா என்ற பெண்ணைiயும் நபி (ஸல்) மணமுடித்தார்கள். ஆனால், அவர்களுடன் வாழ்க்கை நடத்தவில்லை. இது தொடர்பான வரலாற்று ஆசிரியர் உலமாக்கள் பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 


நபி (ஸல்) அவர்களுக்கு இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். ஒன்று: மன்னர் முகவ்கிஸ் வழங்கிய மாயா கிஃப்திய்யா. நபி (ஸல்) அவர்கள் மூலம் இவருக்கு ‘இப்றாஹீம்’ என்ற ஆண் மகவு பிறந்து பாலப்பருவத்திலேயே (ஹிஜ்ரி 10, ஷவ்வால் பிறை 28 அல்லது 29, (கி.பி. 632 ஜனவரி 27ல்) இறந்து விட்டது.


இரண்டாவது அடிமை: ரைஹானா பின்த் ஜைது. இவர் பனூ நளீர் அல்லது பனூ குறைளா சமூகத்தைச் சேர்ந்தவர். பனூ குறைளாவுடன் போரில் கைது செய்யப்பட்ட இப்பெண்ணை நபி (ஸல்) தனது பங்கில் எடுத்துக் கொண்டார்கள். இவரை உரிமையிட்ட பிறகு நபி (ஸல்) மணமுடித்தார்கள், எனவே, இவர் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகி விடுகிறார் என்று வேறு சிலர் கூறுகின்றனர். அறிஞர் இப்னுல் கய்” (ர) ‘முந்திய கூற்றே ஏற்றமானது’ என்கின்றார். அபூ உபைதா (ரஹ்) என்ற அறிஞர் “மேலும் இரண்டு அடிமைப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தார்கள் ஒருவர் ஜமீலா, இவர் போர்க் கைதியாக கிடைத்தவர். மற்றொருவர் பெயர் தெரியவில்லை, அவரை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்கின்றார். (ஜாதுல் மஆது)

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது