08 - வது மாதம் ஷஃபான் நில் நடைபெற்ற போர்களைப் பற்றி

 


இஸ்லாமிய எட்டாவது மாதம் ஷஃபான் மாதத்தில் நடைபெற்ற இஸ்லாமிய போர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு,

இரண்டாம் பத்ர் போர்

 (ஹிஜ் 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி) இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூ ஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.

அபூஸுஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50 குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற பகுதியிலுள்ள ‘மஜன்னா’ என்ற கிணற்றருகில் தங்கினார்.

அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக ‘மர்ருள் ளஹ்ரான்’ வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம் “குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்” என்று கூறினார்.

பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கி கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் செய்யாமல் அனைவரும் திரும்பி விட்டனர்.

முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் 8 நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின் எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி திரும்பி விட்டனர். மீண்டும் முஸ்லிம்கள் மீது மக்களுக்கு பயமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இப்போருக்கு, “இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற பத்ரு” என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்

🔴  இப்போர் ஹிஜ்ரி 5, ஷஅபான் மாதத்தில் நடைபெற்றதென்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஹிஜ்ரி 6ல் நடைபெற்றது என்று கூறுகின்றார்.

இப்போருக்கான காரணமாவது: முஸ்தலக் எனும் கிளையினரின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் தனது கூட்டத்தினரையும் மற்றும் பல அரபிகளையும் அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் போர் புரிவதற்காக வருகிறார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதை உறுதியாகத் தெரிந்து வர, புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமி (ரழி) என்பவரை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் ஹாரிஸ் இப்னு அபூ ழிராரை வழியில் சந்தித்து விபரமறிந்து நபியவர்களிடம் திரும்பி செய்தியைக் கூறினார்.

செய்தி உண்மைதான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டவுடன் நபியவர்கள் தோழர்களைப் புறப்படுவதற்கு ஆயத்தமாக்கினார்கள். ஷஅபான் பிறை 2ல் மதீனாவிலிருந்து நபியவர்கள் கிளம்பினார்கள். இதுவரை எப்போதும் கலந்துகொள்ளாத நயவஞ்சகர்களின் ஒரு கூட்டம் நபியவர்களுடன் புறப்பட்டது. நபி (ஸல்) இப்போருக்குச் செல்லும் போது மதீனாவில் ஜைதுப்னு ஹாஸாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். சிலர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது அபூதர் என்றும் கூறுகின்றனர். மற்றும் சிலர் நுமைலா இப்னு அப்துல்லாஹ் என்றும் கூறுகின்றனர்.

ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் இஸ்லாமியப் படையின் செய்தியை அறிந்து வருவதற்காக ஓர் ஒற்றனை அனுப்பினான். முஸ்லிம்கள் அவனைக் கைது செய்து கொன்று விட்டனர். ஹாரிஸ் இப்னு ழிராருக்கும் அவனுடன் இருந்தவர்களுக்கும் “நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒற்றர்களைக் கொன்று விட்டார்கள். மேலும், தங்களை நோக்கி விரைந்து வருகிறார்கள்” என்ற செய்தி கிடைத்தவுடன் அவர்களுக்குக் கடுமையான அச்சம் ஏற்பட்டது. இதனால் பல அரபுக் கிளையினர் அவர்களின் படையிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ‘முரைஸீ’ என்ற இடத்தை வந்தடைந்தார்கள். இங்குதான் எதிரிகள் தங்கியிருந்தனர். இது கடற்கரைக்கு அருகில் ‘குதைத்’ என்ற ஊர் ஓரத்தில் உள்ள கிணறாகும். அங்கு நபியவர்கள் தங்களது தோழர்களை வரிசையாக நிற்கவைத்து முஹாஜிர்களுக்குரிய கொடியை அபூபக்ர் (ரழி) அவர்களிடமும், அன்சாரிகளுக்குரிய கொடியை ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களிடமும் கொடுத்தார்கள். பின்பு இரு படையினரும் சிறிது நேரம் அம்பெறிந்து சண்டை செய்து கொண்டனர். அதற்குப் பின் நபியவர்கள் கட்டளையிடவே தோழர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக எதிரிகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்களுக்கு வெற்றியும் இணைவைப்பவர்களுக்குத் தோல்வியும் கிடைத்தது. போருக்கு வந்திருந்த எதிரிகளின் பெண்களையும், பிள்ளைகளையும், ஆடுகள் மற்றும் ஏனைய கால்நடைகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். இப்போல் எதிரிகளால் முஸ்லிம்களில் எவரும் கொலை செய்யப்படவில்லை. ஆனால், அன்சாரி ஒருவர் ஒரு முஸ்லிமை எதிரிப் படையில் உள்ளவர் என்று எண்ணி தவறாகக் கொலை செய்து விட்டார்.

இப்போரைப் பற்றி இவ்வாறுதான் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அறிஞர் இப்னுல் கய்” (ரஹ்) இதற்கு மாற்றமாகக் கூறுகிறார். அவர் கூறுவதாவது: இப்படையெடுப்பில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் முஸ்தலக் கிளையினர் மீது தாக்குதல் நடத்த வந்தார்கள். முஸ்தலக் கிளையினர் கொள்ளையிடுவதற்காக தங்கள் ஊரை விட்டு வெளியில் சென்றிருந்தனர். நபியவர்கள் அவர்களின் குடும்பங்களையும் பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினார்கள். இவ்வாறுதான் ஸஹீஹுல் புகாரியிலும் வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இக்கூட்டத்தின் தலைவர் ஹாரிஸின் மகள் ஜுவைரியாவும் இருந்தார். இவரை ஸாபித் இப்னு கைஸ் (ரழி) தனது பங்கில் பெற்றார். இவரை உரிமை விடுவதற்காக இவரிடம் ஓர் ஈட்டுத் தொகை பேசி ஸாபித் (ரழி) ஒப்பந்தம் செய்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியாவின் சார்பாக அத்தொகையைக் கொடுத்து விட்டார்கள். பின்பு ஜுவைரியாவைப் பெண் பேசி திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்களின் திருமணத்தின் காரணமாக முஸ்தலக் கிளையைச் சேர்ந்த நூறு குடும்பத்தினரை முஸ்லிம்கள் உரிமையிட்டனர். ஏனெனில், இப்போது இந்த கைதிகளெல்லாம் நபியவர்களின் மாமனார் குடும்பத்தைச் சேர்ந்தவர் களாயிற்றே! அவர்களை எப்படி நாம் அடிமைகளாக வைத்திருப்பது என்று நபித்தோழர்கள் காரணம் கூறினார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்’ படைப் பிரிவு: 

🔴 ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘தவ்மதுல் ஜன்தல்’ எனும் பகுதியில் இருக்கும் கல்பு கிளையினரின் ஊர்களுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுடன் ஒரு படைப்பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அனுப்பும் போது அவரை நபி (ஸல்) தனக்கு முன் அமர வைத்து, தனது கரத்தால் அவருக்குத் தலைப்பாகை கட்டிவிட்டார்கள். மேலும், போரில் மிக அழகிய முறைகளைக் கையாள வேண்டும் என்று உபதேசம் செய்ததுடன் “அவர்கள் உமக்கு கீழ்ப்படிந்து விட்டால் அவர்களுடைய தலைவன் மகளை நீர் திருமணம் செய்துகொள்!” என்றும் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கி அந்தக் கூட்டத்தினருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தினர் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் ‘துமாழிர் பின்த் அஸ்பக்’ என்ற பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) திருமணம் செய்து கொண்டார்கள். இப்பெண்மணி பிரபல்யமான நபித்தோழர் அபூஸலமாவின் தாயாராவார். இப்பெண்மணியின் தந்தைதான் கல்பு இனத்தவன் தலைவராக இருந்தார்.

‘அலீ இப்னு அபூதாலிப்’ படைப் பிரிவு: 

🔴  ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘ஃபதக்’ எனும் ஊரில் உள்ள ஸஅது இப்னு பக்ரு கிளையினரிடம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களை 200 வீரர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். இக்கிளையினரில் ஒரு பிரிவினர் கைபரிலுள்ள யூதர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதால் அவர்கள் இப்படையை அனுப்பினார்கள். அலீ (ரழி) இரவில் பயணம் செய்வதும், பகலில் பதுங்கிக் கொள்வதுமாக தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு நாள் அலீ (ரழி) அக்கூட்டத்தைச் சேர்ந்த ஒற்றன் ஒருவனைப் பிடித்தார்கள். “யூதப் பகுதியான கைபரில் விளையும் பேரீத்தம் பழங்களில் ஒரு பெரும் பங்கை யூதர்கள் ஸஅது இப்னு பக்ர் கிளையினருக்கு வழங்கினால், அக்கிளையினர் யூதர்களுக்கு உதவிடுவார்கள்” என்பதைத் தெரிவிப்பதற்காகத் தன்னை அனுப்பினர் என்பதை, பிடிப்பட்ட ஒற்றன் ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, அக்கிளையினர் குழுமியிருந்த இடத்தையும் காட்டிக் கொடுத்தான். அவர்கள் மீது அலீ (ரழி) போர் தொடுத்து 500 ஒட்டகைகளையும், 2000 ஆடுகளையும் கைப்பற்றினார். அக்கிளையினர் அங்கிருந்து தப்பித்து ‘ளுவுன்’ என்ற இடத்திற்கு ஓடிவிட்டனர். வபர் இப்னு உலைம் என்பவன் இக்கிளையினருக்குத் தலைமை தாங்கி வந்திருந்தான்.

உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு

🔴  ஹிஜ்ரி 7, ஸஅபான் மாதத்தில் முப்பது நபர்களுடன் உமர் (ரழி) அவர்களை ‘துர்பா’ என்ற இடத்துக்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை இரவில் பயணிப்பதும் பகலில் மறைந்திருப்பதுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்தது. துர்பாவில் வசித்து வந்த ஹவாஸின் கிளையினருக்கு இச்செய்தி எட்டியவுடன் இடங்களைக் காலி செய்து தப்பித்து ஓடிவிட்டனர். உமர் (ரழி) தங்கள் படையுடன் அங்கு சென்று பார்த்த பொழுது யாரும் இல்லாததால் மீண்டும் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள்.

பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு

🔴  ஹஜ் 7, ஷஅபான் மாதத்தில் பஷீர் (ரழி) அவர்களை முப்பது வீரர்களுடன் நபி (ஸல்) ‘ஃபதக்’ மாநிலத்தின் ஓர் எல்லையில் வசிக்கும் முர்ரா கிளையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை அங்கு சென்று தாக்குதல் நடத்தி, அவர்களின் கால்நடைகளை எல்லாம் ஓட்டிக் கொண்டு திரும்பினர். இரவு நேரத்தில் எதிரிகள் படையாக வந்து இவர்களுடன் போர் புரிந்தனர். பஷீர் (ரழி) அவர்களும் அவருடைய தோழர்களும் எதிரிகளை அம்பால் எறிந்து தாக்கினர். இவர்களின் அம்புகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. இறுதியாக நடந்த வாள் சண்டையில் பஷீரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். பஷீர் (ரழி) தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் அங்கிருந்து ஃபதக்குக்குச் சென்றார். காயங்கள் குணமாகும் வரை யூதர்களிடம் தங்கியிருந்து விட்டு மதீனா வந்து சேர்ந்தார்.


நூல் “ரஹீக்” -  ( ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி )

தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி தாருல் ஹுதா சென்னை - 1.

“ஜஸாக்கல்லாஹு ஹைரா”

இந்த  இடத்தில்  ஒருங்கிணைப்பு AbuRiyaz-Gingee

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது