முஹர்ரம் மாதம் ஆஷுரா நோன்பும் அதன் நான்கு கட்டங்களும்


ஆஷுரா நோன்பும், . 
 🔹️அதன் 🔹️ 
நான்கு கட்டங்களும்: 

 🔹️ கட்டம்:-1️⃣ அறியாமைக் கால மக்களும் ஆஷுரா நோன்பும்.!!! 

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்று வந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்படும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் “முஹர்ரம் பத்தாவது நாளில் விரும்பியவர் (ஆஷூரா) நோன்பு நோற்கட்டும்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிடட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி- 1893-முஸ்லிம்2071)

 ஆயிஷா(ரலி) அறிவித்தார். ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமழானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘(ஆஷுராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டு விட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 1592. அத்தியாயம் : 25. ஹஜ் 

 நபியவர்களும், நபித்தோழர்களும் அறியாமைக் காலம் தொட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் போன பின்பும் ஆஷூரா நோன்பை நோற்றார்கள் . 

 அறியாமை காலத்தில் கஃபாவுக்கு புதிய திரைமாற்றும் நாளாக ஆஷூரா நாள் இருந்துள்ளது. 

 எதற்காகக் குறைஷிகள் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்றார்கள் என்பது ஹதீஸ்களில் இடம்பெற வில்லை. 

 🔹️கட்டம்:- 2️⃣ ஹிஜ்ரத்துக்கு பின் ஆஷுரா நோன்பு.! 

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். “நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், “இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில் தான் மூஸாவையும், அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை விட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும், நெருக்கமானவர்களும் ஆவோம்” என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, பிறருக்கும் நோன்பு நோற்குமாறும் (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.

 ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்தார்கள்.: நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!’ என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். ஸஹீஹ் புகாரி : 1960. அத்தியாயம் : 30. நோன்பு 

 🔹️கட்டம்:- 3️⃣ ஹிஜ்ரி 2 ராமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு.!!!

 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடைவிதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை. ஸஹீஹ் முஸ்லிம் : 2080. அத்தியாயம் : 13. 

நோன்பு ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஒரு முறை (சிரியாவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது “மதீனாவாசிகளே, உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆகும்; இந்நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். உங்களில் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்; விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள். 

 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “இது போன்ற (ஆஷூரா) நாளில் நபி (ஸல்) அவர்கள் “நான் நோன்பு நோற்றுள்ளேன். எனவே, நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் காணப்படவில்லை. ஸஹீஹ் முஸ்லிம் : 2081. அத்தியாயம் : 13. 

நோன்பு அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான், “அபூ அப்திர் ரஹ்மான், இன்று முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆயிற்றே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு (ஆஷூரா நாளில்) நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமழான் நோன்பு கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு கைவிடப்பட்டது. ஆகவே, நீங்கள் நோன்பை விட்டுவிட விரும்பினால் நீங்களும் (என்னுடன்) சாப்பிடலாம்” என்றார்கள். இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2079. அத்தியாயம் : 13. நோன்பு 

 ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு ஆஷூரா நோன்பு சுன்னத்தாக மாறிவிட்டது. விரும்பியவர் பிடிக்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம். 

 🔹️கட்டம்:- 4️⃣ ஹிஜ்ரி 11க்கு பின் ஆஷூரா நோன்பு : 

 அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹர்ரம் பத்தாவது நாளை (ஆஷூரா) யூதர்கள் கண்ணியப்படுத்தியும் பண்டிகை நாளாகக் கொண்டாடியும் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 2084. அத்தியாயம் : 13.
நோன்பு 

 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 

 அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: அபூமூஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும், அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) “இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!” என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2085. அத்தியாயம் : 13. நோன்பு

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். (முஸ்லிம்- 2088)

 முஹர்ரம் பிறை ஒன்பது யூதகிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்ய நோன்பு பிடிக்க வேண்டும். பிறை பத்து மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகத்தாரும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப் பட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக நோன்பு பிடிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்